அண்மைய செய்திகள்

recent
-

ஷங்ரி-லா குண்டுவெடிப்பு: பல உண்மைகளை வெளிப்படுத்தியது CID!


உயிர்த்த ஞாயிறன்று எதிர்பாராத விதமாக இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்து பல தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நிதி குற்ற விசாரணை பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தரவின் கையெழுத்துடன் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் ஆலோசனையில் பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர தலைமையிலான குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், ஷங்ரி-லா தாக்குதல் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் அதிக வெளிநாட்டவர்களைக் காவுகொண்ட ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் இரு தற்கொலை குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் முதல் குண்டை குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி சஹரான் ஹாசீமே வெடிக்கச்செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

முதல் குண்டு 8.54 மணிக்கு டேபிள் வன் எனும் உணவகத்தில் வெடித்துள்ளதுடன், இரண்டாம் குண்டு அந்த உணவகம் உள்ள மூன்றாம் மாடியின் மின் தூக்கி மற்றும் படிகள் அமைந்துள்ள வெளியேறல் பிரிவில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 12 இலங்கையர்கள், 24 வெளிநாட்டவர்கள் என 36 பேர் ஷங்ரி-லா ஹோட்டலில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதனைவிட 22 வெளிநாட்டவர்கள் 12 உள்நாட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அந்த உணவகத்தில் சேவையாற்றிய ஒருவரும் காணாமல்போயுள்ளார்.

தற்கொலை குண்டுதாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்களான சஹரான் மற்றும் இல்ஹாம் ஆகியோரின் தலைப் பகுதிகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான DNA பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சஹரானின் தங்கையான மொஹம்மட் ஹாசிம் பாத்திமா மதனியா என்பவர் தற்போது மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்புக்கு அழைத்து வந்து DNA அறிக்கையினை பெற நீதிமன்றம் C.I.D.க்கு அனுமதி வழங்கியுள்ளது.

தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட்டின் தந்தையான மொஹம்மட் யூசுப் இப்ராஹீம் மற்றும் அவரது தாயாரான கதீஜா உம்மா உள்ளிட்டோர் தற்போது C.I.D. யினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஊடாகவும் இல்ஹாமின் சகோதரர்கள் ஊடாகவும் அங்கு இரண்டாவது குண்டை வெடிக்கச் செய்தவர் இல்ஹாம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷங்ரில்லா ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி மொஹமட் எனும் பெயரில் அறை ஒன்றினை பதிவு செய்த நபர், உயிர்த்த ஞாயிறன்று சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்ரி-லா குண்டுவெடிப்பு: பல உண்மைகளை வெளிப்படுத்தியது CID! Reviewed by Author on May 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.