முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! வி.உருத்ரகுமாரன் -
பெரும் இன அழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டு பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசிய துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளை தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை நீர்த்துப் போகச் செய்யச் சிங்களப்பேரினவாதம் பகீரத முயற்சி எடுத்த போதும் அவை வெற்றியடையவில்லை.
தமிழ் மக்கள் தமது சுதந்திர உணர்வை முழுமையாக வெளிப்படுத்தப் போதிய அரசியல் வெளி தமிழர் தாயகத்தில் இல்லாத போதும் தமக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வகை வாய்ப்புகளையும் பயன்படுத்தித் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது உரிமைக்குரலை வெளிப்படுத்திக் கொண்டவாறு தான் உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தை தமிழ் மக்கள் ஏற்கனவே இருக்கும் அனைத்துலக அரங்குகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வரங்குகள் பலவற்றில் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் நாடுகளின் வசமே இருப்பதால், அரசற்ற தமிழ் மக்கள் அங்கு நீதியினைப் பெறுவது இலகுவானதொரு விடயமாக இருக்கப்போவதில்லை என்பது புரிகின்றது.
எனவே நீதிக்கான எமது போராட்டத்திற்காக புதிய போர்க்களங்களை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும். மாறிவரும் உலக சட்ட நடைமுறை அதற்கான வாய்ப்புக்களை தருகின்றது. தற்போது சர்வதேச சட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டு வரும் 'உண்மைகளை அறியும்' உரிமையின் அடிப்படையிலும் right to the truth), 'தெரிந்து கொள்வதற்கான உரிமையின் அடிப்படையிலும் (right to know) பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை நிலை நாட்டும் பொருட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் Victim Driven International Justice (VDIJ ) என்னும் நீதிக்கான முன் முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இம்முன் முயற்சி நாம் புதிதாகத் திறக்கவுள்ள நீதிக்கான போர்க்களங்களில் ஓர் அம்சமாகும்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தந்த ஆழ்ந்த சோகம் நெஞ்சக்கூடெங்கும் நிரம்பியிருக்க, தமிழின அழிப்பின் 10வது ஆண்டினை உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்கள் நினைவேந்தும் நாட்களை சிறிலங்கா அரசு அனுமதிக்காது தடுக்கக்கூடிய நிலைகளும் தற்போது உருவாகியிருக்கின்றன.
இலங்கைத்தீவில் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்விளைவாகப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படலாம். எத்தகைய தடைகள் வந்தாலும் ஈழத்தமிழ் தாயகத்திலும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் மக்களால் நினைவுகூரப்பட்டே ஆகும்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பையும் தமிழர் துயரத்தின் வெளிப்பாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழத் தேசிய துக்க நாளையும் அடையாளப்படுத்தும் வகையில் இரண்டு செயல்களை உலகில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நாம் தோழமையுடன் வேண்டுகிறோம்.
1. மே 18 - தமிழீழத் தேசிய துக்க நாளன்று, ஈழத்தமிழர் தாயகம், தமிழகம், மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பையும் தமிழர் துயரத்தினையும் வெளிப்படுத்த வேண்டும்.
2. முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையிலும், உலகச் சுற்றுச் சூழலை மேம்படுத்த உதவும் வகையிலும் நாம் ஆளுக்கொரு மரத்தை இக் காலப்பகுதியில் நாட்ட வேண்டும். இதனைத் தமிழ் மக்கள் தாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்திலும் மேற்கொள்ள வேண்டும்.
நாம் நாட்டும் ஒவ்வொரு மரக்கன்றின் ஊடாகவும் நாம் தமிழின அழிப்பில் மாண்டுபோன உறவுகளை நினைவு கூர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! வி.உருத்ரகுமாரன் -
Reviewed by Author
on
May 06, 2019
Rating:
Reviewed by Author
on
May 06, 2019
Rating:


No comments:
Post a Comment