மலேசியாவில் சிக்கியுள்ள 3000 வெளிநாட்டு தொழிலாளர்கள்!
அபராதம் செலுத்த 11,500 இந்திய ரூபாயும் விமானச்சீட்டு எடுக்க 6,500 ரூபாயும் இல்லாததால் பல தொழிலாளர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மலேசிய அரசின் மன்னிப்புத் திட்டம் வரும் டிசம்பர் 31ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், அத்தொழிலாளர்களுக்கு தெலுங்கானா மாநில அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அண்மையில் மலேசியாவுக்கு சென்றிருந்த தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் வளைகுடா ஒருங்கிணைப்பாளர் நாங்கி தேவேந்தர் ரெட்டி,
“அபராதம் செலுத்தவும் விமானச்சீட்டு எடுக்கவும் மாநில அரசு தொழிலாளர்களுக்கு உதவி செய்தால் அவர்களால் நாடு திரும்ப முடியும். இல்லையெனில் அவர்கள் சிறைப்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இத்தொழிலாளர்கள் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதால் இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி, சட்டரீதியாக முறையான பயண ஆவணங்களுடன் மலேசியா சென்றவர்களும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
அப்படி நாடு திரும்ப அரசின் உதவியை எதிர்ப்பார்த்துள்ள தொழிலாளி கோலபள்ளி திருப்பதி தெலுங்கானா அமைச்சர் ராமா ராவ் உதவியை நாடியிருக்கிறார்.
மலேசியாவில் உள்ள மோசமான வேலைச்சூழல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட இத்தொழிலாளிக்க மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
“எனது முதலாளி 2,000 மலேசியா ரிங்கட் (33,000 ரூபாய்) கொடுத்தால் தான் கடவுச்சீட்டை திருப்பிக்கொடுப்பேன் என்கிறார். எனது ஒட்டுமொத்த பணத்தையும் மருத்துவத்திற்காக செலவு செய்துவிட்டேன்.
என்னிடம் வேறு பணமில்லை,” என தெலுங்கானா தொழிலாளி தெரிவித்துள்ளதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மலேசிய தெலுங்கானா சங்கமும் தன்னார்வலர்களும்,
மலேசிய அரசின் மன்னிப்புத் திட்டத்தை பயன்படுத்தி இந்தியாவுக்கு திரும்ப தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை 300க்கும் குறைவான தொழிலாளர்களே இந்தியா திரும்பியுள்ளனர்.
“ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்ட பல தொழிலாளர்கள்
மூன்று மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகள் வரை சட்டவிரோதமாக பணியாற்றுகின்றனர்.
அச்சத்தில் வாழ்வதை தவிர, அவர்கள் பெரிதாக எதுவும் சம்பாதிப்பது இல்லை,” எனத் தெரிவித்திருக்கிறார் அச்சங்கத்தைச் சேர்ந்த சைதம் திருப்பதி.
மலேசியாவில் சிக்கியுள்ள 3000 வெளிநாட்டு தொழிலாளர்கள்!
Reviewed by Author
on
September 27, 2019
Rating:

No comments:
Post a Comment