அண்மைய செய்திகள்

recent
-

பூமியைப்போல் புதிய கோள் கண்டுபிடிப்பு..! உயிர் வாழ்வதற்கான கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி -


சூரியக் குடும்பத்திற்கு அப்பால், பூமியைப் போன்ற ஒரு கோள் உயிர் வாழ்வதற்கு தேவையான சாத்தியக்கூறுகளுடன் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 ஆயிரத்து 109 கோள்கள் இதுவரை சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோள்களில் வளிமண்டலம் இருந்தாலும், அவை அடிப்படையில் வாயு உருண்டைகளாக உள்ளன.

பல கோள்களில் பூமியைப் போன்ற நிலத்தரை அம்சம் இருந்தாலும், அவற்றில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்ததில்லை. காரணம், மிகக் கடுங்குளிர் அல்லது மிகக் கடுமையான வெப்பம் என்ற இந்த இரு சூழ்நிலைகளிலும் கோள்களில் திரவ வடிவில் நீர் இருக்க முடியாது.
இந்நிலையில், விஞ்ஞானிகள் பூமியைப் போன்றதொரு புதிய கோளை கண்டுபிடித்துள்ளனர். இந்த கோள் பூமியைப் போல் 8 மடங்கு நிறையும், இரு மடங்கு பெரியதுமாக உள்ளது. இதற்கு K2-18b என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், இது சூரிய மண்டலத்தில் இருந்து 110 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கோளானது பூமியுடன் ஒப்பிடும்போது நட்சத்திரத்தில் இருந்து மிக அதிகமான தொலைவிலோ அல்லது மிகக் குறைந்த தொலைவிலோ இல்லாமல் திரவ வடிவில் நீரை தக்க வைத்துக் கொள்வதற்கான தொலைவில் சுற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திரவ வடிவில் நீர் இருந்தால் மட்டுமே, வளிமண்டலத்தில் நீராவி கலந்திருக்கும். அந்த வகையில் உயிர் வாழ்வதற்கு சாத்தியமான பூமியைப் போன்ற தட்பவெப்ப நிலையுடன் கூடிய ஒரு கோளின் வளிமண்டலத்தில், முதல் முறையாக நீராவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹப்பிள் வானியல் தொலைநோக்கியின் நிறமாலைமானியின் மூலம் இந்தக் கோளை ஆராய்ந்து, நீராவி இருப்பதை மிகவும் துல்லியமாக ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். இதேபோல், K2-18b கோளில் ஹைட்ரஜன், ஹீலியம் இருப்பதற்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதன் வளிமண்டலத்தில் மேகங்கள் எந்த அளவுக்கு உள்ளன மற்றும் நீரின் அளவு போன்ற விவரங்கள் குறித்து தொடர் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிபடுத்தப்பட உள்ளது.

பூமியைப்போல் புதிய கோள் கண்டுபிடிப்பு..! உயிர் வாழ்வதற்கான கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - Reviewed by Author on September 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.