எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்து இலட்சம் வேலை வாய்ப்புகள்! தி.சரவணபவன்
இலங்கையில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் தகவல் தொழில்நுட்பத்தில் ஐந்து இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியின் தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வருடத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் க.பொ.சாதாரண தரம், உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை விலகுகின்றனர்.பெருமளவான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லமுடியாத நிலையில் உள்ளபோது இவ்வாறான தொழில்நுட்ப கல்லூரிகள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன.
மட்டக்களப்பின் எதிர்கால கல்வி நிலையினை ஆய்வு செய்தபோது மிகவும் கவலையளிக்ககூடிய வகையில் உள்ளது.எதிர்வரும் க.பொ.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட ஆய்வில் சுமார் 38வீதமான மாணவர்களே சித்தியடையக்கூடிய நிலையில் தற்போதுள்ளனர்.
கல்லடி பாலம் ஒரு தற்கொலை மையமாக மாறியிருந்த காலம் இன்று மாற்றப்பட்டுள்ளது.சுமார் 77பேர் கல்லடி பாலத்தில் தற்கொலை செய்துள்ளனர்.தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
24மணித்தியால கண்காணிப்பு சேவை அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கல்லடி பாலத்தினை ஒரு வியாபார மையமாக மாற்றுவதற்கான உடன்படிக்கையொன்று வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் கைச்சாத்திட்டுள்ளோம்.
எமது மாணவர்கள் ஒரு இலக்கினை நோக்கி நகராத நிலையே காணப்படுகின்றது.நாங்கள் அவர்களை ஒரு இலக்கினை நகர்த்தவேண்டும்.அவ்வாறு இல்லாவிடத்து சரியான வழிகளில் அவர்களை மாற்றமுடியாது. இலக்கு ஒன்று தெரிவுசெய்து அதனை ஒரு வாழ்க்கையாக கருதும்போதே அதில் இளைஞர்கள் வெற்றி பெறமுடியும்.
இன்று அனைவரும் அரசதுறையில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கும் நிலையே காணப்படுகின்றது.தொழிற்சந்தையில் 80வீதமான வேலை வாய்ப்புகளை தனியார் துறை வழங்குகின்றது.
14வீதமான வேலைவாய்ப்புகளையே அரசதுறை வழங்குகின்றது.நாங்கள் இந்த 14வீதத்தினையே தேடுகின்றோம்.துறைசார்ந்த திறன்களை எங்களுக்குள் வளர்த்துக்கொள்ளாத காரணத்தினால் தொழில்சந்தையில் தோல்வியடையும் நிலையிருக்கின்றது.
இலங்கையில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் தகவல் தொழில்நுட்பத்தில் ஐந்து இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளது.
பாரியளவிலான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.எனவே இந்த துறையில் அதிகளவான மாணவர்கள் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்து இலட்சம் வேலை வாய்ப்புகள்! தி.சரவணபவன்
Reviewed by Author
on
September 05, 2019
Rating:

No comments:
Post a Comment