அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் தமிழ் அகதி குடும்பம்! 26.8 மில்லியன் டொலர் செலவு -
கடந்த ஜூலை 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான காலக்கட்டத்தில், அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள், குடிவரவு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களை இடம் மாற்றுவதற்காக 6.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அவுஸ்திரேலிய உள்துறை செலவழித்துள்ளது.
இதில் 5.7 மில்லியன் டாலர்கள் தனி விமானங்களுக்காவும் 4 லட்சம் டொலர்கள் வணிக ரீதியலான விமானங்களுக்காகவும் செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பீட்டர் டட்டன் தலைமையிலான உள்துறையில், இவ்வாறான செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை முன்வைத்துள்ளது அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சியான லேபர் கட்சி.
இதில், குறிப்பாக தமிழ் அகதி குடும்பம் சிறைவைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் பற்றிய கேள்வியும் எழுந்துள்ளது.
நான்கு பேர் கொண்ட ஒரு தமிழ் அகதி குடும்பம் சிறைவைக்கப்பட்டிருக்கும் இம்முகாமிற்கு 26.8 மில்லியன் டொலர்களை அவுஸ்திரேலிய அரசு செலவழித்துள்ளதே இக்கேள்விக்கான முக்கிய காரணம்.
கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.
தஞ்சக்கோரிக்கையாளர்களான இவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் கோபிகா, தருணிகா) பிறந்தன.
அவுஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.
அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது ஆஸ்திரேலிய அரசு. இத்தீவில் செயல்படும் முகாமிற்கு பெரும் தொகை செலவழிக்கப்பட்டதுகுறித்தே தற்போது விமர்சனம் எழுந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் தமிழ் அகதி குடும்பம்! 26.8 மில்லியன் டொலர் செலவு -
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment