அண்மைய செய்திகள்

recent
-

பெருந்தோட்டத்துறைக்கு சோமாலியாவிலிருந்து தொழிலாளர்கள்?


பெருந்தோட்டப் பகுதிகளை மீளவும் கட்டியெழுப்பி, வருமானம் தரக்கூடிய வகையில் மாற்றியமைக்க வேண்டுமானால் இரு வழிகள் மட்டுமேயுள்ளன.

பெருந்தோட்டங்களை பெருந்தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து, அவர்களுக்கே சொந்தமாக்குவது, தவறின் சோமாலியா போன்ற பின்தங்கிய நாடுகளிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து, தோட்டத் தொழில் துறையினை முன்னெடுப்பது.

இவ்விரண்டு வழிகளில் ஏதாவதொரு வழியைப் பின்பற்றினால் மட்டுமே, பெருந்தோட்டங்களை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.

பெருந்தோட்டங்களில் தற்போதைய நிலையில் தொழிலாளர் பற்றாக்குறை பூதாகரமாக இருந்து வருகின்றது. பெண் தொழிலாளர்களினாலேயே, பெருந்தோட்டங்களின் இருப்பு தங்கியுள்ளது.

ஆண்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே, தோட்டங்களில் தொழில் செய்கின்றனர். பெரும்பாலானோர் வெளி வேலைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களும் முறையாகப் பராமரிப்பின்றி, தோட்டங்கள் காடுகளாகியுள்ளன.

காட்டு மிருகங்களும் அங்கு குடிகொள்கின்றன. தவறணைகள் என்றழைக்கப்படும் மீள் தேயிலைப் பயிர்ச்செய்கைகளும் இடம்பெறுவதில்லை. தேயிலை உற்பத்தியும், வருமானமும் வெகுவாகக் குறைந்து காணப்படுகின்றன. இதனால், பலதோட்டங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஐம்பதுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் செயலிழந்து உள்ளன.

எமது நாட்டிற்கு அன்னிய செலாவனியைத் தேடித் தந்து கொண்டிருந்த இத்தொழில் துறை பெரும் பின்னடைவினை எதிர்கொள்வதை எம்மால் அனுமதிக்க மடியாது. எமது சமூகத்திற்குரிய அடையாளத்தையும் நாம் பாதுகாத்தாக வேண்டும்.

தற்போதையவுள்ள அவல நிலை தொடரும் பட்சத்தில் இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் பெருந்தோட்ட தேயிலையின் நிலை படுமோசமான இடத்திற்கு தள்ளப்பட்டு விடும். தற்போதுள்ள தலைமுறையினருடன் பெருந்தோட்ட தேயிலைத் தொழில்துறை மட்டுப்படுத்தப்படும். அடுத்த தலைமுறையினர் இத்தொழில் துறையினை விரும்புவதில்லை.

இத்தொழில் துறையினை பாதுகாப்பதனால், பெருந்தோட்டங்கள், தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து, அத் தோட்டங்கள் சிறு தோட்டங்களாகி அதன் உரிமையாளர்களாக எமது சமூகத்தினர் மாற வேண்டும். அந்நிலை ஏற்படும் போது, அத் தோட்டங்களில் தேயிலைத் தொழில்துறையினை எவ்வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று எம்மவர்களுக்கு தெரியும். இத்தகைய வழிமுறையையே, ஆரோக்கிய சூழலைத் தோற்றுவிக்கும். எமது சமூகத்தின் அடையாளமும்,“சிலோன் டீ” என்ற நாமமும் பாதுகாக்கப்படும்.

இத்தகைய வழிமுறை சாத்தியப்படாது போனால், சோமாலியா போன்ற பின் தங்கிய நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டு, பெருந்தோட்ட தேயிலைத் தொழில்துறையில் ஈடுபடுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் எம் மூதாதையர்கள் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்து கூலிகளாக்கியது போன்று, குறைந்த சம்பளத்தில் கூடுதல் வேலைகளை செய்விக்க, சோமாலியா போன்ற நாடுகளிலிருந்து தொழிலாளர்களை கொண்டுவந்து தொழில்துறையில் ஈடுபடுத்துவதன் மூலமே,

இத்தொழில்துறையினை அபிவிருத்தி செய்ய முடியும். சோமாலியா போன்ற நாடுகளில் தொழிலின்றி அங்குள்ள மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனரென்று சர்வதேச ஜனநாயக தொடர்பாளரும், சமூக ஆய்வாளருமான ஜெகான் ஜெகதீசன் குறிப்பிட்டிருகின்றார். பதுளையில் நடைபெற்ற செயலமர்வொன்றில் உரையாற்றும்போதே, அவர் இத்தகவலை வெளியிட்டார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு தொழிலாளர்களை எடுப்பிப்பதென்பது நடைபெற்றுவரும் செயலாகும். 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந் திகதி வரை சீனா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து 35 ஆயிரம் பேர், எமது நாடுகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்று பெருந்தோட்டத்தொழில் துறையினை மீளவும் கட்டியெழுப்புவதற்கு அரசு சோமாலியா போன்ற பின் தங்கிய நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இங்கு கூட்டி வந்து பெருந்தோட்டத்தொழில் துறையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

தற்போதைய நிலையில் பெருந்தோட்டத் தொழில் துiயினை 23 கம்பனிகள் பொறுப்பேற்றுள்ளன. இக்கம்பனியாளர்கள் தோட்டத் தொழிற்சங்கங்களையோ, தொழிலாளர்களையோ ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தோட்டத் தொழிற்சங்கங்கள் பலவீனப்பட்டிருப்பதுவே, இதற்கு காரணமாகும்.

அந்தளவிற்கு தொழிற் சங்கங்கள் அதிகரித்திருக்கின்றன. 63 தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், 15க்கு குறைவான தொழிற்சங்கங்களே இயங்கிக் கொண்டிருக்கின்றன. பெருந்தோட்டத் தொழில் துறையில் தொழிற்சங்கங்கள் அதிகரிப்பதை, பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றிருக்கும் கம்பனிகள் பெருமளவில் ஆதரித்து வருகின்றன.

நாட்டின் பெரும் நகரங்களின் பெரும் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களை அமைப்பதை அத்தொழிற்சாலை நிருவாகங்கள் அனுமதிப்பதுமில்லை. விரும்புவதுமில்லை. ஆனால், அதற்கு எதிர் மாறாகவே மலையகப் பெருந்தோட்டங்களில் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் பெருந்தோட்டங்களில், தோட்ட முகாமையாளர்களின் அனுமதி மற்றும் அங்கீகாரமின்றி எந்தவொரு வேலைத்திட்டத்தினையும் மேற்கொள்ள முடியாது. தோட்ட மக்கள் தேர்தல்களில் வாக்களிக்க முடியும்.

ஆனால், அவ் வாக்களிப்புக்களின் முழுப் பயனையும் பெற்றுக்கொள்வதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. நாட்டின் ஏனைய சமூகங்களுக்கப்பால் பிறிதொரு கட்டமைப்பிலேயே பெருந்தோட்ட மக்கள் வாழக்கூடிய நிலை விரும்பியோ விரும்பாமலோ இருந்து வருகின்றது.

உள்ளுராட்சி மன்ற 31ஃ1 திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தோட்ட முகாமையாரின் அனுமதியின்றி தோட்டங்களில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியுமென்று கூறப்பட்டிருந்த போதிலும், அது நடைமுறையில் இல்லாதிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றிருக்கும் கம்பனிகளிடம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்தோ, தொழிலாளர்களின் சேம நலன்கள் குறித்தோ பேச்சு வார்த்தைகளை நடாத்தும் போது, பெருந்தோட்டங்கள் பெரும் நஸ்டத்தில் இயங்குகின்றன. இதனால் சம்பள உயர்வோ, சேமநலன்கள் பற்றியோ எத்தகைய நடவடிக்கைகளையும் எம்மால் எடுக்க முடியாதென்று கையை விரித்து விடுகின்றனர்.

பெருந்தோட்டங்கள் நஸ்டத்தில் இயங்குகின்றனவென்று தொடர்ந்தும் கூறிக்கொண்டிருக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு மேல் நஸ்டத்தைக் கூறிக்கொண்டிருக்க, தோட்டக் கம்பனிகளினால் முடியாது. மாற்று நடவடிக்கைகளை தோட்டக் கம்பனிகள் எடுத்தாக வேண்டுமென்பது நியதி.


இத் தோட்டக்கம்பனிகளின் வருடாந்தர கணக்கறிக்கைகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கம்பனிகள் கூறிவரும் “நஸ்டம்” என்ற விடயங்கள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சு கம்பனிகளின் கணக்கறிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இப்பரிசீலனைகள் தோட்டங்களை கம்பனிகள் பொறுப்பேற்ற காலம் தொடங்கி, இதுவரை இடம்பெறவில்லை. தோட்டக் கம்பனிகள் கூறுவதை தெய்வ வாக்காக தொழிற்சங்கங்கங்கள் கருதி வருகின்றன.
விரல் விட்டு எண்ணக்கூடிய தோட்டத் தொழிற்சங்கங்கள் சில தொழிலாளர் நலன் கருதி செயற்பட்டாலும், பல தொழிற்சங்கங்கள் பெயர்ப்பலகைகளுக்கும், கடிதத் தலைப்புக்களுக்கும், நடமாடும் நிலைக்கும் (நடமாடும் தொழிற்சங்கங்கள்) தள்ளப்பட்டுள்ளன.

ஒருசில தொழிற்சங்கங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும் நடாத்தப்பட்டு வருகின்றன. தோட்டக் கம்பனிகளின் தயவை நாடி செயற்படும் தொழிற்சங்கங்களும் இருக்கவே செய்கின்றன.
இதுபோன்ற தொழிற்சங்கங்களினால், தோட்டங்களைப் பொறுப்பேற்றிருக்கும் கம்பனிகள், எந்தவொரு தொழிற்சங்கத்தினையும் மதிக்காமல், நாம் நினைத்ததை செய்து வருகின்றன.


ஆகையினால் பெருந்தோட்டத் தொழில்துறை மேம்பாடுகளை முன்னிலைப்படுத்திய வேலைத்திட்டங்கள், காலம் தாழ்த்தப்படாமல் முன்னெடுக்கப்படல் வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

கட்டுரை – எம்.செல்வராஜா
kuruvi.lk
பெருந்தோட்டத்துறைக்கு சோமாலியாவிலிருந்து தொழிலாளர்கள்? Reviewed by Author on March 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.