வண்ணன் ஒரு சகாப்தம் ! ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி..!
வார்த்தைகளை தேடி களைத்து போகின்றேன். கண்கள் பனிக்கிறன. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள்!. ஒரு இன அழிப்பிலிருந்து மீண்டு மெல்ல வருகையில் இயற்கையும் எம்மை வஞ்சிக்கிறது .
இன்று 09.04.2020 ஈழத்து வன்னிமண் வடபுலத்தில் நெற்களஞ்சியமாம் பூநகரி தன் தவப்புதல்வனை இழந்து தவிக்கிறது. ஆம் கிளிநொச்சி பூநகரியை பிறப்பிடமாகவும் பிரான்சு தேசத்தில் குடியுரிமை பெற்றவருமான ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன் எம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவரது தந்தையாராகியா தில்லைநாதன் அவர்கள் பூநகரியின் முன்னை நாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆவார். பல கல்வியலாளர்களை தாயகத்தில் உருவாக்கியவர் . அவருடைய மகனும் ஊடகவியலாளருமான ஆனந்தவர்ணன் இலண்டன் சென்ற நிலையிலேயே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈழத்து ஊடக பரப்பில் ஆளுமை மிக்க ஒரு இளம் ஊடகவியலாளரை இன்று பறிகொடுத்து இருப்பது எமக்கு பேரிழப்பாகும் . அவன் வளர்ந்த நல்லூரும், பூநகரி மண்ணும், ஆலடியும், பூநகரி மத்திய கல்லூரியும், அவன் இளமை தோழர்களும் அவன் நினைவுகளை சுமந்து அசைபோடுகின்றனர். அவனோடு நாம் பயணித்த நினைவுகளை மீட்டி அசைபோட்டுப் பார்க்கின்றோம் .
துடிப்பான இளவயது
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? என்பது போல ஆனந்தவர்ணன் அவர்கள் இளம் வயதிலேயே துடிப்புடனும் சமூக நோக்குடனும் செயற்பட்ட பிள்ளை. எல்லோரிடமும் அன்பாக பேசும் அவனுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம். எப்பொழுதும் சுறு சுறுப்பும் புன்னகை தவழும் முகமும் அவனின் அடையாளம் . ஆரம்ப கல்வியை கிளி. பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து கிளி.பூநகரி மத்திய கல்லூரியிலும் தனது கல்வியை திறம்பட கற்று வந்தான். சிறு வயதிலேயே கல்வியிலும் கலையிலும் ஆர்வம் கொண்டவன்.
இந்நிலையில் தாயகத்தில் கொடும் போர் மேகம் சூழ்ந்து கொண்டது. தொடர் இடம்பெயர்வுகள், பொருள் அழிவுகள், உயிர் பலிகள் என வலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. பூநகரியில் இருந்த மக்களும் இடம்பெயர்ந்து ஒவ்வொரு இடமாக இருந்து முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். மக்களோடு மக்களாக வண்ணனின் குடும்பமும் பயணமானது.
இந்நிலையில் இவர்கள் சுதந்திரபுரம் பகுதியில் தற்காலிகமாக தங்கி இருந்த குடியிருப்பின் மீது ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. பல நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். குறித்த சம்பவத்தில் ஆனந்தவர்ணனுடைய அன்புத்தாயார் சிவநேசராணி(மணி ) அவர்களும் போரின் கோரப் பசிக்கு பலியானார் .
துன்பங்களும் துயரங்களும் துரத்தி கொண்டே வந்தது. முள்ளிவாய்க்காலில் ஒரு கொடும் இன அழிப்பு நடந்தேறியது. அதிலிருந்து மீண்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது தாயகம். மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டனர். ஆனந்தவர்ணனின் குடும்பமும் பூநகரிக்கு வந்து சேர்ந்தது. அன்புள்ள அப்பா, அக்கா என அவர்கள் குடும்பம் அழகானது. பூநகரியின் வயல்கள் மெல்ல நெற்கரங்களால் மக்களை வரவேற்க தொடங்கியது .
மக்கள் பணியாற்ற கிடைத்த ஆணை
இந்நிலையில் கணனி கற்கை நெறியினையும் ஆங்கில மொழிக் கல்வியையும் பூர்த்தி செய்த ஆனந்தவர்ணனுக்கு மக்கள் பணி ஆற்ற ஒரு வாய்ப்புக் கிடைத்தது . இராணுவ கெடுபிடிகள் நெருக்கு வாரங்கள் எல்லாவற்றையும் தாண்டி மக்கள் அவனுக்கு ஆணை வழங்கினர். உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி பெற்று பூநகரி பிரதேச சபையின் உறுப்பினராகி நற்பணி ஆற்றினான். அவன் சேவையிலும் புதிய சிந்தனைகளாலும் பூநகரி புத்துயிர் பெறலாயிற்று. எனினும் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கு வாரங்களினால் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டது. நாட்டை விட்டு வெளியேறிய ஆனந்தவர்ணனுக்கு பிரான்சு நாட்டில் அகதி தஞ்சம் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது .
ஊடகப் பணி
சிறு வயது எனிலும் அரசியலின் ஒவ்வொரு நுணுக்கங்களயும் அறிந்து வைத்திருந்தான். அதை எண்ணி பலர் வியந்து பாராட்டியதுண்டு. கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிசு தானே! அப்படி தான் எங்கள் வண்ணனும். சில வேளைகளில் தாயகத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களை தொலைபேசி வழியாகவோ, SKYPE வழியாகவோ, நேர்காணல் காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது வண்ணன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற சில அரசியல்வாதிகள் திணறிப் போவார்கள். இப்போதும் ஞாபகம் இருக்கிறது நான் அடிக்கடி சொல்வேன் “வண்ணா நீ பேசாமல் அரசியல்வாதி ஆகி இருக்கலாம்டா” என்பேன் அப்போது எல்லாம் “அண்ணா! என்ன நக்கலா” , என்று ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு செல்வான் .
நிகழ்ச்சி தொகுப்பாளனாய் வண்ணன்
அடிக்கடி பொறுப்பாளர் ஆனந்த வண்ணன் பற்றி குறிப்பிடும் போது “எதையும் முதலில் செய்வதும் அதை சரியாய் செய்வதும் வர்ணன் தான்” என்பார். அதனால் தான் என்னவோ சாவிலும் எம்மை முந்தி விட்டான் போலும். அவன் செய்கின்ற செயலில் ஒரு நேர்த்தி எப்பொழுதும் இருக்கும். தன்னால் முடியாது என எண்ணிவிட்டால் வெளிப்படையாக சொல்லி விடுவான். அதற்கு பிறகு எவரும் வற்புறுத்த முடியாது. தாயகப் பார்வை, நிலவரம், பத்திரிகை செய்தி என அவனது படைப்புகள் உலக, தாயக அரசியல் நோக்கி ஆழமாக விரிந்தது. வர்ணனுடன் இணைந்து பத்திரிகைக் கண்ணோட்டம் செய்வதில் எனக்கு ஒரு அலாதி பிரியம் . அன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம் அரசியல் நையாண்டிகளோடு சுவாரஸ்யமாக விரியும். முக்கியமாக சொன்னால் எனது ஊரான் எனது தம்பியுடன் இணைந்து நிகழ்ச்சி தொகுப்பது என்பது எனக்கு ஒரு தனி கெத்து தானே.
சக ஊடக நண்பர்களோடு
செய்தியாசிரியராக இருந்த வண்ணன் நிகழ்ச்சி தொகுப்பதிலும் வல்லவன். அரிய அரிய தகவல்களை எல்லாம் நுணுக்கமாக திரட்டி சுவைபட நேயர்களுக்கு வழங்கும் அழகு அலாதியானது. அதற்காக அவர்கள் செலவிடும் நேரம், உழைப்பு என்பது பெரியது .அவர்கள் நிகழ்ச்சி தொகுக்கும் போது அணிந்து வரும் ஆடைகள் பற்றிய கதையே நான்கு நாட்களுக்கு ஓடும் என்றால் பாருங்களன். அமைப்பு சார்ந்த ஏனையவர்களிடமும் அன்போடு பழகும் இனியவன்.
ஒன்றாக பணி புரிகின்றோம் என்பதையும் தாண்டி ஒரு குடும்ப உறுப்பினர்களாகவே நாங்கள் பயணித்தோம். மற்றவர்கள் எங்களை பார்த்து பொறாமை படுவதுமுண்டு. இதை வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறார்கள். சில வேளைகளில் பூநகரி பற்றிய செய்தி வந்தால் “என்னடா உங்கட ஊரை பற்றி எதாவது செய்தி வந்தால் அதை முதல்ல போட்டுடுவீங்கள் என்ன” என்று சக நண்பர்கள் சும்மா வண்ணனை கலாய்த்ததும் உண்டு .
குரு அண்ணனுடன் இணைந்து வண்ணன் நிகழ்ச்சி தொகுக்கும் போதும் இலாவகமாக வெட்டிப் பேசும் போதும் வர்ணனின் பேச்சு திறமையை கண்டு வியந்திருக்கிறேன். நான் மட்டும் அல்ல பல நேயர்களும் பல கல்வியலாளரும் நேர்காணலுக்கு வருபவர்களும் கூட பாராட்டியிருக்கின்றார்கள். ஒன்றாக பணி செய்பவர்களோடு மட்டுமல்லாமல் ஏனைய ஊடகத்தை சேர்ந்த நண்பர்களோடும் கூட நல்ல உறவை பேணியவன் .
பல் துறை நாயகன்
நெறியாளராக இருப்பவரிடம் தொழில்நுட்பம் தொடர்பான அறிவு இருப்பதில்லை. ஆனால் வர்ணனிடம் பல்துறை ஆற்றல் இருந்தது. தொலைக்காட்சி சம்பந்தமான பல தொழில்நுட்ப சாதனங்களை பற்றிய அறிவும் அதனை கையாளும் அறிவும் நிறையவே இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி தொகுக்க வேண்டிய சக தொகுப்பாளர் வராதபோது பரவாயில்லை நான் செய்கின்றேன் என்று சொல்லி நிகழ்ச்சியை தொகுக்கின்ற துணிவு அவனிடம் இருந்தது. பிரெஞ்சு ஆங்கிலம் மற்றும் டொச்சு போன்ற மொழிகளை அறிந்து இருந்தான் .
பல அன்னையர்களுக்கு மகன்
சிறு வயதில் தன்னை பெற்டுத்த அன்னையை பிரிந்து இருந்தாலும் அன்பாலும் நல்ல பண்பாலும் பல அன்னையர்கள் இவனை பிள்ளையாகவே கருதி அழைத்தனர். குறிப்பாக லதா ரீச்சரை குறிப்பிட வேண்டும் . கலையகத்துக்கு வந்தால் முதலில் விசாரிப்பது வண்ணனை தான். ’ரீச்சர் ஏன் எங்களை பார்த்தா மனுசரா தெரியல்லையா? வந்த உடனே மகனை விசாரிக்குறீங்கள்’ எண்டு பகிடிக்கு சண்டை போடுவம் . வண்ணனை சம்மதிக்க வைக்க வேண்டுமென்றால் லதா ரீச்சரிடம் சொன்னால் போதும். ரீச்சர் ஒருவாறு அவனை சம்மதிக்க வைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு லதா ரீச்சர் மீது வண்ணனுக்கு அன்பும் மரியாதையும் இருந்தது. இப்படி கலையகத்துக்கு வரும் எவரும் இவனை விசாரிக்காமல் சென்றதில்லை. செய்தி வாசித்து விட்டு கலையகத்தை விட்டு வெளியே வரும் போது என்ன வண்ணன் செய்தியில் குரல் ஒரு மாதிரி இருந்திச்சு உடம்பு சரியில்லையா? மருந்து எடுத்தீர்களா? என தொலைபேசியில் அழைத்து விசாரிக்கும் அளவிற்கு நேயர்களின் மனதையம் கருத்தையும் கொள்ளை கொண்டவன். வாழ்க்கையை திட்டமிடுவதையும் போட்ட திட்டத்தின் படி நடந்து கொள்வதையும் இவனிடம் தான் நாம் கற்று கொள்ள வேண்டும் . அக்காவின் மீதும் பிள்ளைகளின் மீதும், அண்ணனின் மீதும் அளவற்ற அன்பு கொண்டவன். அடிக்கடி அக்காவை பற்றியே பேசி கொள்வான். யார் மீதும் சினம் கொள்ளாதவன். அஞ்சா நெஞ்சன். இன்று எங்களை எல்லாம் தவிக்க விட்டு விட்டு நெடுந் தூரம் சென்று விட்டான்.
எங்கள் வீட்டு செல்லப்பிள்ளை
கலையகத்திலும் சரி வீட்டிலும் சரி எனக்கும் அவனுக்கு பிரச்சனை வருவது கணனியில் தான். அடிக்கடி எனது கணனியில் கோளாறுகள் வந்துவிடும் . ’வண்ணா ஒருக்கா சரி பண்ணி விடு டா தம்பியா’ என்பேன் . பேச தொடங்கி விடுவான். அண்ணா’ கண்டதையும் பதிவு இறக்குறது பிறகு அது வேலை செய்யுதில்ல, இது வேலை செய்யுதில்ல எண்டு என்னை தொல்லை பண்ணுவாய்’ எண்டு பேசி பேசி திருத்தம் செய்து தருவான் . எங்கள் வீட்டின் சின்னப்பிள்ளை இவன் தான். வேண்டுமென்றே வம்பிழுப்போம் . மகி பெட்ரோல் அடிச்சா இவன்ற கார்ல கொண்டே இறக்கி விடுவானோ வண்ணனை கேள் என்பேன் . இறுதியில் சமாதானம் செய்ய மது அண்ணன் வருவார். அன்றய சமையலில் உப்பு தூக்கல் என்றால் அன்று வண்ணனின் போனில் சுவாரஸ்யமான கதை பொய் கொண்டு இருந்திருக்கு எண்டு விளங்கி கொள்ள வேண்டும் . வேறு வழியில்லை சாப்பிட்டு தான் ஆக வேண்டும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பொருட்கள் எல்லாம் அடுக்கப்பட்டு இருக்க வேண்டும் . இல்லாவிட்டால் குப்பைக்கு போய் விடும். இப்படி சின்ன சின்ன சண்டைகள் என அன்பால் மகிழ்ந்திருந்தோம் .
ஊரை பற்றிய பேச்சு வருகிற போதெல்லாம் அண்ணன் ஊருக்கு ஏதாவது செய்யவேணும் என்பான். அண்ணா கெளதாரி முனையிலே கடற்கரைக்கு கிட்டவா ஒரு காணி வேண்டோனும் என்பான். ஏன் டா ஹோட்டல் கட்ட போறியோ வண்ணா? என்று கேட்டதற்கு .அதெல்லாம் இல்லை ஒரு ஆசை .உனக்கு தான் நிறைய பேர அங்கால தெரியுமே கேட்டு விசாரிச்சு சொல்லு என்று கேட்பான் .இப்படி அவன் பிறந்த பூநகரியின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவன்.
வலிசுமந்த நினைவுகளோடு
ஒரு முறை சுவிஸ் பயணத்தின் போது நண்பன் தினேஷின் வீட்டில் அண்ணா கூழ் குடிக்க வேணும் போல இருக்கு எண்டு சொல்ல எனக்கு காய்ச்சத் தெரியாதடா என்றேன். அதைப்பற்றி நீங்க ஜோசிக்காதையுங்கோ நான் காய்ச்சித் தாறன் எண்டு காய்ச்சி குடிச்ச கூழின் சுவை இன்னும் என் நாவில் நிற்கிறது .
அவனது ஒவ்வொரு வெற்றியையும் அருகிருந்து பார்த்து மகிழ்ந்தவன் நான். அகதி தஞ்ச கோரிக்கை முதல் வாகன அனுமதி பத்திரம் , டிப்ளோமா, பிரெஞ்சு குடியுரிமை பெற்றுக்கொண்டது வரை அவனது விடா முயற்சியாலும் கடும் உழைப்பாலும் கிடைத்த வெற்றிகளே என்பேன். அப்பா, அக்கா , அத்தான், அக்கா பிள்ளைகள், அண்ணா , அண்ணி , அண்ணா பிள்ளைகள் உறவினர்கள், நண்பர்கள் என பாசத்தால் நிரம்பிய நிறைகுடம் அவன். எங்கள் எல்லோரின் செல்லப்பிள்ளை அவன். பிரான்சில் குடியுரிமை கிடைத்ததும் நோர்வேயில் உள்ள அக்காவிடம் செல்ல வேண்டும் என்கின்ற அவனது விருப்பத்திற்கு பிரிய மனமில்லாமல் விடை கொடுத்தோம் . இன்றோ இலண்டன் சென்று மீண்டு வர முடியாத இடத்திற்கு நிரந்தரமாய் சென்று விட்டான் எங்கள் அன்பு வண்ணன் .
வண்ணனிடம் இருந்து நாம் நிறைய நல்ல விடயங்கள் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பூநகரி மண்ணின் மைந்தன் அஞ்சா நெஞ்சன் ஆனந்த வண்ணன் ஒரு சிறந்த இளம் ஆளுமை! வண்ணன் ஒரு சகாப்தம் .ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி. அவன் நினைவுகளை சுமந்து கனவுகளை நனவாக்குவோம் ….
- பார்த்தீபன் - (ஊடகவியலாளர்)
வண்ணன் ஒரு சகாப்தம் ! ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி..!
Reviewed by Author
on
April 12, 2020
Rating:

No comments:
Post a Comment