ஆயுள் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட கண்ணதாசன் தொடர்ந்தும் சிறையில்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பை தள்ளுபடி செய்ததுடன், அவரை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் கட்டளை வழங்கியிருந்தது. இந்நிலையில் கண்ணதாசன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு வழக்கை மீள விளக்கத்துக்காக எடுப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கு நேற்றைய தினம் (26) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, செப்டம்பர் 7ம் திகதி அழைக்குமாறு தவணையிட்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், அன்றைய தினம் எதிரியை மன்றில் முற்படுத்துமாறு வெலிக்கடைச் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்களில் ஒருவரான கண்ணதாசன் தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்து, போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் பகுதியில் 2007 ஜனவரி மாதமளவில், மஞ்சுளா விஜயபாலன் எனும் சிறுமியைக் கட்டாயமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்த்ததாக அவருடைய தாயார், கண்ணதாசன் மீது 2014 மார்ச் மாதமளவில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றால் ஆயுட்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேன்முறையீட்டு மனு மீது விசாரணை, இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை 22ம் திகதி அவரது ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.
இந்த நிலையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுனரான சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார். கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
எதிரி தொடர்ந்து வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. எதிரியை வரும் 7ம் திகதி முற்படுத்துமாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு உத்தரவிட்ட வவுனியா மேல் நீதிமன்றம், அன்றைய தினம் வரை வழக்கை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு மீள விளக்கத்துக்கு எடுக்கப்படவுள்ள நிலையில் கண்ணதாசன் சார்பில் வவுனியா மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டால் பரிசீலிக்கப்படும் என்று அரச தரப்புத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment