அண்மைய செய்திகள்

recent
-

சிறு மற்றும் மத்திய தொழிற்துறை நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது

சிறு மற்றும் மத்திய தொழிற்துறை இன்று நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

 ஹம்பாந்தோட்டை மாகம் ருஹூணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில நடைபெற்ற ´சிறு மற்றும் நடுத்தர நிறுவன மேம்பாட்டு மாநாடு - 2020´ இல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கொவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் கடந்த குறுகிய காலத்திற்குள் சலுகை கடன் வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தி பணி மூலதன தேவைகள் மற்றும் கடன் உத்தரவாதங்களை பூர்த்தி செய்ய முடிந்தது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 குறித்த சந்தர்ப்பத்தில் கொவிட் -19 சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை தொடர்பான முன்மொழிவு, சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவரும் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் லக்ஷ்மன் ஆர் வடவல அவர்களினால் கௌரவ பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கான கடன் உத்தரவாத நிறுவனத்தை நிறுவுதல், வருமான வரி நிவாரணம் வழங்குதல், தொழிலாளர் சட்டங்களை திருத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான நிறுவனத்தை நிறுவுதல் ஆகியவை இந்த திட்டத்தில் உள்ளடங்கும். 

 அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், இந்த மண்டபத்தில் இவ்வாறானதொரு மாநாட்டை நடத்த முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஐந்து வருடங்களில் இந்த மாநாட்டு மண்டபத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்படாததால், இன்று உங்களுக்கு இதனை பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. முதலாவது பிராந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு மாநாட்டை ஆரம்பிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில், சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவரும் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் லக்ஷ்மன் ஆர் வடவல அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

 தொழில்முறை நிறுவனங்கள், வர்த்தக சபை, வணிக வங்கிகள் மற்றும் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய இந்நிறுவனத்தின், சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக் குழுவை நிறுவுவது மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இது உண்மையிலேயே சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு மேற்கொள்ளும் ஒரு முக்கியமான சேவையாகும். சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இன்று நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். அது நம் நாட்டின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதத்திற்கு இத்துறை பங்களிக்கிறது. இது அனைத்து வேலைவாய்ப்புகளிலும் 45 சதவீதம் ஆகும். மேலும், இத்துறை நாட்டின் மொத்த தொழில்முனைவோரின் எண்ணிக்கையில் 75 சதவீதமாகும். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்பது வங்கிகளின் சுமார் 300 வாடிக்கையாளர்கள் இந்த முக்கியமான மாநாட்டில் பங்கேற்றதை நான் பாராட்டுகிறேன். ´புதிய பொருளாதாரத்தில் நிதி முகாமைத்துவம், வங்கி நிதி வழங்கல் மற்றும் தொழில் முனைவோர் தலைமைத்துவம் தொடர்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இன்று முகங்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வு´ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாட்டை நடத்துவது மிகவும் உகந்ததாகும்.

 நிதி அமைச்சின் கீழ், இலங்கை மத்திய வங்கியின் ஆதரவுடன், கொவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதற்கு ரூபாய் 100 பில்லியன் நிதியை நன்கொடையாக வழங்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. நாம் கடந்த குறுகிய காலத்திற்குள் கடன்களுக்கு சலுகை வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தி, பணி மூலதன தேவைகள் மற்றும் கடன் உத்தரவாதங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தோம்.

 இந்த மாநாட்டில், முறையான நிதி நிர்வாகம், வணிக மேம்பாட்டுக்கு நிதியை முறையாகப் பயன்படுத்துதல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்தல், தொழிலாளர் போன்ற முக்கியமான பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் உலக ஏற்றுமதியின் சராசரி சதவீதம் 30 சதவீதமாகும். இருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரையில் அதில் 5 சதவீதமாகும். இதை அதிகரிக்க ஒரு அரசாங்கமாக எங்கள் ஆதரவை வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். 

 சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி மையத்தை நிறுவியமை தொடர்பில் அக்குழுவை நான் வாழ்த்துகிறேன். இலங்கைக்கு மதிப்புமிக்க அந்நிய செலாவணியை சம்பாதிப்பதற்கான இச்செயற்பாட்டிற்கு ஊக்குவிப்பது அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்புகளை நிறைவேற்றுவோம். 

 ஹம்பாந்தோட்டை போன்ற மிகவும் கஷ்ட பகுதிகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தொடர்பில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். கடன் உத்தரவாத அமைப்பை நிறுவுவதற்கான இந்த குழுவின் பரிந்துரைகள் குறித்து தொழில்துறை அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை குறிப்பு தொடர்பிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். சொத்துக்கள் இல்லாததால் புதிதாக இணை உத்தரவாதங்களை வழங்க முடியாத சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக, வெளிநாட்டு கடன் வழங்கும் நிறுவனங்களின் உதவியை பெற்று இந்த நிறுவனத்தை நிறுவ எனது ஆதரவை வழங்குவேன்.

 ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு வங்கித் துறைக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு பிற மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று நம்புகிறேன். இதன்மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் இலங்கை பொருளாதாரத்திற்கும் நன்மை கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முதலீட்டாளர்கள் உயர்ந்து வருவதாக வங்கிகள் சாட்சியமளிக்கின்றன.

 வங்கிகளிடமிருந்து எடுக்கப்பட்ட கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது வங்கித் துறையின் கடன் இழப்பைக் குறைக்கிறது. இது அனைத்து வங்கிகளுக்கும் அதிக கடன் வழங்குவதை சாத்தியமாக்கும். இறுதியாக, சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் சந்தையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அந்நிய செலாவணி சம்பாதிப்பதில் பங்களித்ததற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் தெரிவித்தார்.

 குறித்த மாநாட்டில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலய மேம்பாடு இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்க, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்தி, சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன மேம்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் லக்ஷ்மன் ஆர் வடவல, டி.எஸ்.ஐ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி குலதுங்க ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சபையின் பணிப்பாளர் சுரேஷ் டி மெல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சிறு மற்றும் மத்திய தொழிற்துறை நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது Reviewed by Author on September 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.