அமெரிக்கா - சீனா வல்லாதிக்க பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை!
எல்லை பிரச்சினை காரணமாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் பதட்டம் காணப்படுகின்ற நிலையிலும், தென்சீன கடல் மற்றும் தாய்வான் நாட்டு பிரச்சினை காரணமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகல் எழுந்துள்ள சூழ்நிலையிலும் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு வந்துள்ளார்.
சீனாவின் மிகவும் நட்பு நாடான இலங்கைக்கு அவரது வியஜத்தின் நோக்கம் என்னவென்று ஊகிப்பதற்கு முன்பே இலங்கையில் உள்ள சீன தூதரகம் அமெரிக்கா வெளியுறவு செயலாளரின் வருகைக்கு எதிரான தனது கண்டன அறிக்கையை வெளியிட்டதானது இதன் விபரீதத்தை புரியக்கூடியதாக இருந்தது.
அதாவது ஒரு இறைமையுள்ள நாடொன்றின்மீது அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளை திணிப்பதுடன் வெளியுறவுக் கொள்கையில் மேலாதிக்கத்தினை மேற்கொள்கின்றது என்று சீனா கூறியுள்ளது.
மைக் பொம்பியோவின் விஜயத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பதாகவே அமெரிக்காவின் போர் விமானங்களும், CIA அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திறங்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இந்த விமானங்களின் வருகையானது அமெரிக்க வெளியுறவு செயலாளரின் பாதுகாப்புக்கானது என்று கூறப்பட்டாலும், பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு முன்பு இலங்கை அரசாங்கத்தை சற்று அச்சுறுத்தி பணியவைக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகமே அதிகமாக உள்ளது.
இந்தியா – சீனா எல்லையில் போர் பதட்டம் ஏற்படுவதற்கு முன்பே சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் ட்ரம் நிருவாகம் பொருளாதார போர் செய்துவருகின்றது.
இந்த நிலையில் இந்திய எல்லையில் சீனா தனது இராணுவத்தினர்களை குவித்ததன் பின்பு அமெரிக்கா வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதானது இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதனை தடுத்துவிட்டு அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை செலுத்த களமிறங்கியுள்ளது.
இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்று சீனா கூறியுள்ளதையே மைக் பொம்பியோவும் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு சீனா கடனை வழங்கி அந்நாடுகளை தனது சுயலனுக்கு ஏற்ப கையாள்கின்றது என்றும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
எப்படியாவது இலங்கையை சீனாவிடமிருந்து பிரிப்பதுதான் அமெரிக்காவின் திட்டமாகும். அதற்காகவே மைக் பொம்பியோவின் வருகை அமைந்திருந்தது. ஆனால் இது பற்றி என்ன பேசப்பட்டது ? பேச்சுவார்த்தை வெற்றியளித்ததா ? போன்ற ரகசியங்கள் வெளிவருவதற்கு சாத்தியமில்லை. அதனை காலப்போக்கில் நடைமுறையிலேயே புரிந்துகொள்ள முடியும்.
இலங்கை சீனாவின் பிடியிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு கட்டுப்பட்டு நடந்தால், அது எதிர்காலத்தில் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவது கடினம். அதேநேரம் இலங்கை அரசாங்கத்துக்கு தமிழர்களின் பிரச்சினையை துரும்பாக பயன்படுத்தியும் அமெரிக்கா இலங்கையை பணியவைக்கவும் முற்படலாம்.
இந்தியா மூலமாக இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும்படி அமெரிக்கா அழுத்தம் வழங்கினால், அது இன்றைய அமெரிக்க வெளிவிவகார செயலாளரின் வருகை தோல்வியில் முடிந்துள்ளது என்று கருதலாம். இதனை எதிர்வரும் அரசியல் நகர்வுகள் உறுதிப்படுத்தும்.
அமெரிக்கா - சீனா வல்லாதிக்க பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை!
Reviewed by Author
on
October 29, 2020
Rating:

No comments:
Post a Comment