காணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்
பருத்தித்துறை- வல்லிபுரக்குறிச்சி, சிங்கைநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தாமாக பிறிதொரு இடத்தில் இருக்கும் வயல் காணியில் ஒரு குழுவினர் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதனால் மணல் கடத்தல் காரர்களுக்கும் காணி உரிமையாளருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
மணல் கடத்தல் கும்பல் கடந்த சனிக்கிழமை மாலை காணி உரிமையாளரின் வீட்டிற்கு வாள்களுடன் சென்று மிரட்டிச் சென்றுள்ளனர்.
அதுதொடர்பில் கும்பலுக்கு எதிராக மிரட்டப்பட்டவரால், பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும் பொலிஸார் உடனடி நடவடிக்கையை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அந்த வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த மணல் கடத்தல் கும்பல், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் மாலை வாள்களுடன் வந்து மிரட்டிய நிலையில் அச்சமடைந்த குறித்த வீட்டார் அயல் வீட்டில் சென்று இரவு தங்கியிருந்த நிலையில் அங்கும் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் அவர்களை தாக்க முற்பட்டபோது, தடுக்க முற்பட்ட அந்த வீட்டைச் சேர்ந்த முதியவரை தாக்கியிருந்தனர்.
இந்தத் தாக்குதலில் சிங்கை நகர் வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா (வயது – 68) என்ற முதியவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் காணிக்கு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பிரதீபன் (வயது-24) என்ற இளைஞனை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
எனினும் அதுதொடர்பில் முறைப்பாடு கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். குடிதண்ணீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் இளைஞன் காணாமற்போயிருந்தார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் நேற்று வட.மராட்சி- முராவில் பகுதியில் மீட்கப்பட்டது. அந்த மோட்டார் சைக்கிளில் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது.
இளைஞன் தொடர்பில் எந்தவித தகவல்களும் தெரியவில்லை என உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே காணாமற்போன இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு அண்மையாக வல்லிபுரக் குறிச்சி வீதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.
இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் காணப்பட்டதை கண்ணுற்ற ஒருவர், அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற அம்புலன்ஸில் இளைஞன் ஏற்றப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
பருத்தித்துறை பொலிஸாருக்கு வைத்தியசாலையால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்
Reviewed by Author
on
December 01, 2020
Rating:
Reviewed by Author
on
December 01, 2020
Rating:


No comments:
Post a Comment