அண்மைய செய்திகள்

recent
-

உலகை அச்சுறுத்தும் மர்ம தூண்கள் – 6ஆவது தங்க நிற மர்ம தூண் கொலம்பியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் மர்மமான தூண்கள் வரிசையில் 6ஆவது மர்ம தூண் கொலம்பியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மர்ம தூண்கள் அனைத்தும் வெள்ளி நிறத்தில் இருந்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூண் தங்க நிறத்தில் உள்ளது. இந்த தூண் கொலம்பியாவில் உள்ள சியா நகராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் இந்த மர்ம தூண்கள் ஏலியன்களால் நிறுவப்பட்டதா, அல்லது ஏதேனும் குழுக்களால் மக்களை பயமடைய செய்யும் நோக்கத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

 அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் முதன் முறையாக மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுபோன்ற நிகழ்வு உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18ஆம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

 இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விபரமும் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தது. அந்த தூண் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் மர்மமான முறையில் மாயமானது. இந்த ஆண்டை ஆட்டிப்படைக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் பாலைவனத்தின் நடுவே உலோக தூண் மர்மமான முறையில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டிருந்த சம்பவம் இந்த ஆண்டு இறுதி பகுதியை மேலும் பதற்றம் அடைய செய்தது. அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்தும் பலர் இது ஏலியன்கள் பூமிக்கு வருவதற்கான அறிகுறி என இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், யூட்டா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தூணை போன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் நிறுவப்பட்ட தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி முதல் மர்ம தூண் நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ருமேனியா நாட்டின் பட்ஹா டொம்னி மலைப்பகுதியில் 2ஆவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது. 3ஆவது மர்ம தூண் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பைன் மலைத்தொடர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஐஸ்லி ஆப் வெயிட் என்ற தீவில் உள்ள கடற்கரையில் முக்கோண வடிவிலான 4ஆவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது. 

 அதனைத் தொடர்ந்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள அவுண்ட் ஹார்ன் என்ற நகரில் உள்ள காட்டுப்பகுதியில் 5ஆவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தூணை நாங்கள் தான் நிறுவினோம் என அமெரிக்காவை சேர்ந்த ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்’ என்ற அமைப்பு பொறுப்பெற்றுள்ளது. இந்நிலையில், 6-வது மர்ம தூண் கொலம்பியா நாட்டில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



உலகை அச்சுறுத்தும் மர்ம தூண்கள் – 6ஆவது தங்க நிற மர்ம தூண் கொலம்பியாவில் கண்டுபிடிப்பு Reviewed by Author on December 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.