வவுனியாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின
கன மழை காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் 68 குடும்பங்களை சேர்ந்த 211 பேர், தமது உறவினர் வீடுகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
இதேவேளை இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு முன்பாக நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு முறிந்து வீதியில் வீழ்ந்துள்ளதுடன், சாந்தசோலைப்பகுதி மற்றும் புளியங்குளம் நெடுங்கேணி பிரதான வீதியில் நின்றிருந்த மரங்களும் வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்காக விழுந்துள்ளன.
இதனால் குறித்த வீதிகளுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், சிலமணி நேரங்களின் பின்னர் அது வழமைக்கு திரும்பியிருந்தது.
நேற்று காலையில் இருந்து பெய்து வரும் மழை காரணமாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன், வைத்தியசாலையின் மதிலும் உடைந்து விழுந்துள்ளது.
குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், விவசாய காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையான காலப்பகுதியில் வாகனசாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய பாதிப்புக்கள் தொடர்பாக பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதேவேளை புயல் சின்னம் இலங்கையின் கரையை கடந்திருந்தாலும் எதிர்வரும் இரண்டு தினங்களிற்கு மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
வவுனியாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment