இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெறவேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுத்தல்
குறித்த சிறுமி பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக மரண விசாரணை தொடர்பில் வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிறுமியின் மரணம் தற்கொலை என்னும் கோணத்தில் விசாரணையை பொலிஸ் தரப்பு மூடிமறைக்க முயல்வதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான 8,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் இவ்வருடம் ஜுன் 12 ஆம் திகதிவரை 3500 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபையின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
இவற்றில் 2020 ஆம் ஆண்டு சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பாக 235 முறைப்பாடுகளும் இவ்வாண்டு 87 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, எந்தவொரு அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவில்லை என்பதையே இத்தகைய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
குடும்பங்களில் நிலவும் வறுமை காரணமாக கல்வியைத் தொடரவேண்டிய சிறுவர்கள், சிறுவர் தொழிலாளிகளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர்.
16 வயதுவரை கட்டாயக் கல்வியை வலியுறுத்தும் இலங்கையில், சிறுவர்கள் கல்வியைத் தொடரமுடியாத அளவுக்கான பொருளாதார நெருக்கடிகளை இந்த அரசே ஏற்படுத்துகின்றது. இதனால், இத்தகைய சிறுவர்களின் துன்பியல் மரணங்கள், இவ்வாறான அரசின் தவறுகளை மூடிமறைப்பதற்காக தற்கொலையாக மாற்றப்படுகின்றதா என்கின்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.
குறித்த சிறுமியின் மரணம் மற்றும் நடைபெற்றிருந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணைகள், எவ்வித பக்கச்சார்போ, தலையீடுகளோ இன்றி நேர்மையாக நடைபெறவேண்டும்.
எவராயினும் குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படவேண்டும்.
இதுவே, ஈடுசெய்ய முடியாத சிறுமியின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்குக் கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த ஆறுதலாகவாவது அமையும்.
சிறுமி இசாலினிக்கு நடந்த துஸ்பிரயோகங்களையும், விசாரணையின் இழுத்தடிப்புக்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதுடன், சிறுமியின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெறவேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுத்தல்
Reviewed by Author
on
July 22, 2021
Rating:
Reviewed by Author
on
July 22, 2021
Rating:



No comments:
Post a Comment