மன்னாருக்கு பிரேத மின் தகன நிலையமொன்று அவசியமா? இலைஜா ஹூல் (மின் பொறியியலாளர்)
1. மன்னாரில் கோவிட் உயிரிழப்புக்கள் உண்மையிலேயே அதிகரித்து வருகிறதா?
மன்னாரில் இதுவரை நிகழ்ந்த மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை (as at 27 ஆகஸ்ட் 2021) 13. தரவுகள் கிடைக்கும் கடைசி வாரமான, ஆகஸ்ட் 21 – 27 வரையான வாரத்தில் ஒரேயொரு மரணமே நிகழ்ந்தது. அதற்கு முந்தைய வாரம் 4 மரணங்கள். அதற்கு முந்தைய இரு வாரங்களில் கோவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
2. மன்னாரில் கோவிட் இழப்புக்கள் எந்தளவிற்கு உயராலாம்?
இதுவரை மரணங்கள் குறைவென்பதால் இனியும் கோவிட் மரணங்கள் அதிகரிக்காது என்று சொல்லி விட முடியாது.
இலங்கையில் ஒரு நாளில், 1 மில்லியன் சனத்தொகைக்கு கோவிட் தொற்றால் மரித்தவர்களது எண்ணிக்கை 10 ஐத் தாண்டவில்லை. உலக அளவில் கோவிட் உயிரிழப்புக்கள் மிக, மிக மோசமாகச் சென்ற நாடுகளான பெரூ, பிரேசில் போன்ற நாடுகளில் – பேரிடரின் உச்சத்தில் கூட – இந்த எண்ணிக்கை 25 ஐத் தாண்டவில்லை.
இந்த உக்கிரமான இழப்புக்கள் தடுப்பூசி போடாத காலகட்டத்தில் நிகழ்ந்தவை. மன்னாரில் 30 வயதிற்கு அதிகமானோரில் 70 வீதமானவரகள் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டார்கள்.
சிறந்த தடுப்பூசிப் பேறுகளைக் கொண்ட, ஏறத்தாழ 100,000 பேர் சனத்தொகை கொண்ட மன்னார் மாவட்டத்தில், உச்சபட்சமாக ஒரு நாளிற்கு ஓரிரு கோவிட் மரணங்களைத் தாண்டுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.
அத்தோடு எமது மாவட்டத்தில் கோவிட் தொற்றால் இறப்பதற்கு அதிக வாய்ப்பைக் கொண்ட 60 வயதிற்கு அதிகமானோர், மாவட்ட சனத்தொகையில் 9% இலும் குறைவு (கொழும்பில் இந்த விகிதம் 12% இலும் அதிகம்). எமது மாவட்டம் சனத்தொகை அடர்த்தி குறைந்தது. வீடுகள் தனி அலகானவை. சிறந்த காற்றோட்டத்தைக் கொண்டது. இவையும் கூட எமது மாவட்டத்தில் பிரதான நகரங்களைப் பார்க்க கொரோனாவின் வீரியத்தை மட்டுப்படுத்த வேண்டும்.
3. இறந்த உடல்களிலிருந்து கோவிட் பரவாது தடுக்க, சடலங்களை எரிக்க வேண்டுமா?
இல்லை. கோவிட் மனிதரிடமிருந்து, பிற மனிதருக்கு காற்று வழியே பரவும் கொள்ளை நோய். கோவிட்டால் மரித்த பிரேதங்களிடமிருந்து மனிதருக்கு கோவிட் தொற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு தகுந்த காப்புறை இன்றிப் பிரேதங்களை நேரடியாகக் கையாண்டிருக்க வேண்டும்.
பிரேதங்களை எரிப்பதனூடாகவே, பிரேதங்களின் வழியே கோவிட் பரவுவதைத் தடுக்கலாம் என்ற எண்ணப்பாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை.
பிரதங்களை எரிப்பதோ, புதைப்பதோ கலாச்சார விருப்புக்களுக்கு அமைவானது என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும், உலக சுகாதர நிறுவனத்தின் கோவிட்டால் மரித்த சடலங்களைக் கையாள்வது குறித்த பரிந்துரைகளை அடக்கிய சுற்றறிக்கை, சடலத்திலிருந்து கணிசமான திரவக் கசிவுகள் இல்லாத வரை சடலப் பைகள் கூட அவசியம் இல்லை என்றும் கோவிட் சடலங்களை இடம் மாற்ற சிறப்பு வாகனங்கள் அவசியம் இல்லை என்றும் சொல்கிறது; சடலங்களை நேரடியாகக் கையாள்பவர்கள் மாத்திரம் தகுந்த காப்புறைகளை அணியும் படி பிரேரிக்கிறது.
4. இலங்கை நாட்டில் கோவிட் சடலங்களைப் புதைக்க அனுமதியுண்டா?
ஆம். கோவிட்டால் மரணித்தவரது உறவினர்கள் சடலத்தைப் புதைக்கவென சுகாதார அதிகாரிகளைக் கோர வேண்டும்; சடலப் பெட்டியொன்றைக் கையளிக்க வேண்டும். இதன் பின்னர் சுகாதார அதிகாரிகள் சடலத்தைப் புதைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
5. மன்னாருக்கு பிரேத மின் தகன நிலையமொன்று அவசியமா?
நிச்சயமாக இல்லை. மன்னாரில் கையாள முடியாத தொகைக்கு கோவிட் மரணங்கள் அதிகரிக்கப் போவதில்லை.
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் வாழும் மன்னார் மாவட்டத்தில் உலக சுகாதர நிறுவனத்தினதும், இலங்கை அரசாங்கத்தினதும் தற்போதைய சிபாரிசுகளின் அடிப்படையில் கோவிட் சடலங்களை மன்னாரிலேயே பாதுகாப்பாகப் புதைக்க நடவடிக்கை எடுப்பதே பொருத்தமான செயற்பாடாகும். மன்னார் வாழ் இந்துக்கள் தமது சமய சம்பிரதாயங்களையொட்டி மன்னாரிலேயே பாதுகாப்பாக சடலங்களை எரிக்க மன்னார் சுகாதார அதிகாரிகள் முன்வர வேண்டும. இல்லை வவுனியாவில் தான் எரிக்க வேண்டுமெனில், அந்தக் குடும்பங்களுக்கு மட்டும் சிறப்புப் பண உதவி செய்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
விடுத்து 26 மில்லியர் ரூபா செலவில் மின் தகன நிலையமொன்றை நிறுவ முயல்வது வீண் செயல்.
நிறுவி முடிவதற்குள் 100% ஆனவர்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்று விடுவார்கள். கொடுந்தொற்றின் உச்சத்தை நாம் கடந்திருப்போம். நோக்கம் நல்லதெனினும், இது அநாவசியமான திட்டமும், தீர்வும். இந்த நிதிச் சேர்ப்பை உடனடியாக நிறுத்துவதோடு, சேர்க்கப்பட்ட பணத்தை வேறு வழிகளில் செலவு செய்யவோ அல்லது மீள நன் கொடையாளர்களிடமே சேர்க்கவோ சம்பந்தப்பட்ட நபர்கள் முன்வர வேண்டும்.
மன்னாருக்கு பிரேத மின் தகன நிலையமொன்று அவசியமா? இலைஜா ஹூல் (மின் பொறியியலாளர்)
Reviewed by Author
on
September 06, 2021
Rating:

No comments:
Post a Comment