சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"
இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்தனர்.
0இந்த நிலையில், வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் திராவிடம் தொடர்பான அவரது எதிர் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விரிவாக பதில் அளித்தார் சீமான். அதன் விவரம்:
தமிழக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடுவோம். அது தொடர்பாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் விவாதித்தோம். கடந்த முறை எங்களுக்கு மக்கள் 12 சதவீத வாக்குகளை வழங்கினார்கள். இம்முறை அதை விட அதிகமான வாக்குகள் வரும் என நம்புகிறோம்.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்களை விற்க தடை விதித்திருக்கிறது தமிழக அரசு அதை வரவேற்கிறோம். அதுபோல, டாஸ்மாக் மதுபான கடைகளையும் இந்த அரசு மூடுமா? தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது திமுக. ஆனால், ஏதோ இப்போதுதான் அந்த கட்சி தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆட்சிக்கு வருவது போல, தமிழ் படித்தவர்களுக்கு ஆட்சியில் முன்னுரிமை என்ற அறிவிப்பை வெளியிடுகிறது.
இதை கேட்கும்போது "ஆஹா" என இருக்கலாம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?
எங்களுடைய அண்ணன் தமிழீழ வைப்பகம் என்ற பெயரில் வங்கி நடத்தினார். அதை போலவே நாங்களும் தமிழர் வைப்பகம் என்ற சேமிப்பகத்தை நடத்தி, மிகக் குறைந்த வட்டிக்கு தொழில் முனைவோருக்கும் வேளாண் குடிமக்களுக்கும் கடன் கொடுத்து உதவுவதாக கூறியிருக்கிறோம்.
ஆனால், 18 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த ஒரு கட்சி, மாநிலத்தில் கால் நூற்றாண்டாக ஆட்சியில் இருந்த கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏதோ புதிதாக ஆட்சிக்கு வந்து ஒரு திட்டத்தை அறிவிப்பது போல, தமிழ்நாடு ஸ்டேட் வங்கி ஆரம்பிப்போம் என்று ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.
மறைந்த கருணாநிதியின் நினைவிடத்துக்கு ரூ. 39 கோடி நிதி செலவிட்டு சமாதி கட்டுவோம் என அரசு அறிவிக்கிறது. அது யாருடைய பணம்? ஆனால், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவோம், ஆறு கோடி ரூபாயில் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களை பராமரிப்போம் என்கிறீர்கள்.
கள்ளுக்கடைகள், கேரளாவில் உள்ளன, ஆந்திராவில் உள்ளன, புதுச்சேரியில் கூட உள்ளன. ஆனால், ஏன் தமிழ்நாட்டில் அப்படி திறப்பதில்லை? அப்படி செய்தால் டாஸ்மாக் வியாபாரம் முடங்கி விடும். அது நடந்தால் மதுபான ஆலைகள் படுத்து விடும். அதுதான் இவர்களுக்குப் பிரச்னை.
நாங்கள் ஏன் திராவிடத்தை எதிர்க்கிறோம்?
பெரியாருக்கு ரூ. 100 கோடிக்கும் மேலாக சிலை வைப்போம் என்று கூறுகிறார்கள். பெரியாரிடம் எதை கேட்டாலும் அதற்கு அவர் பணம் வாங்கும் வழக்கத்தை கொண்டவர். திருமணத்துக்கு அவர் வருவதானாலும் காசு வாங்குவார். மேடையில் அவர் பேசும்போது ஒரு முறை யாரோ ஒருவர் செருப்பை எடுத்து வீசுகிறார். அதை எடுத்து வைத்துக் கொள்கிறார். மற்றொரு செருப்பை என்ன செய்யப்போகிறார், அதையும் எடுத்து வீசு என்று கூறி அதையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்.
தன் மீது வீசப்பட்ட செருப்புகளை எல்லாம் அடுக்கி வைத்து ஜோடி அரையணா விலை என்று கூறி அவற்றை விற்று அந்த செருப்புகளை காசாக்கி பணம் சேமித்தார் பெரியார். அப்படி எல்லாம் பணம் சேர்த்து பல பள்ளிகள், கல்லூரிகளை ஆரம்பிக்க உதவிச் சென்றார்.
இங்கே பேருந்து கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்? அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள் என அர்த்தம். குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவிக்கிறீர்கள். காரணம் என்ன? அவருக்கு கைச்செலவுக்கு காசில்லை. அங்கும் வறுமை. அரசி இலவசம் என்கிறீர்கள். காரணம், அதை விலை கொடுத்து வாங்கவும் வசதியில்லை.
0இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்கு சீர்திருத்தவாதி, முற்போக்குவாதி, அதற்கான தலைவர் என்று பேசப்பட்ட ஐயா பெரியாருக்கு ரூ. 100 கோடியில் சிலை வைப்பதாக பேசுவது எப்படி இருக்கிறது?
குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு ரூ. 3,000 கோடியில் மோதி சிலை வைத்ததற்கும், நீங்கள் ரூ. 100 கோடியில் பெரியாருக்கு சிலை வைப்பதாக அறிவிப்பதால் உங்களிருவருக்கும் என்ன பெரிய மாறுபாடு இருக்கிறது? தமிழ்நாட்டில் பெரியாருக்கு போதும் என்ற அளவுக்கு சிலைகள் உள்ளன. இப்படி செய்வதற்குப் பெயர்தான் பணக்கொழுப்பு, அதிகாரத் திமிரு. பெரியார் இருந்தால் கூட இப்படி செய்வதை விரும்பியிருக்க மாட்டார். இந்தக் கொடுமைகளை எல்லாம் எடுத்துரைத்தால், சிலர் திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கொதிக்கிறார்கள்.
திராவிடம் என்றால் ஏன் எங்களுக்கு எரியாது? 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆளக்கொடுத்து கணக்கிலடங்கா ஊழலை செய்து, என் நிலத்தின் வளத்தைக் கெடுத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, காடு, மலை, ஏரி, குளம் எல்லாவற்றையும் அழித்து நாசமாக்க பார்க்கும்போது ஒரு தூய தமிழ் மகனுக்கு நெஞ்சும் வயிறும் எரியாமல் என்ன செய்யும்?
0திராவிடம் என்றால் எங்களுக்கும் சிறிது சொறியத்தான் செய்கிறது. ஆனால், தமிழ், தமிழர், தமிழம், தமிழ் தேசியம் என்றால் உங்களுக்குத்தான் எரிகிறது என்றார் சீமான்.
சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்"
Reviewed by Author
on
September 06, 2021
Rating:

No comments:
Post a Comment