புலம்பெயர் தமிழர்களை நோக்கிய கோத்தாவின் அழைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்
இலங்கைத்தீவில் அமைதியை கொண்டுவருவதில் கோத்தாவுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால், முதற்படியாக, ஐ.நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையர் அல் {ஹசைன் அவர்கள், 2015ல் பரிந்துரைத்திருந்த 'ரோம் உடன்படிக்கையில்' கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும். மேலும் கைச்சித்திட்டு பின்னோக்கி காலத்தையும் உள்வாங்கியதாக வேண்டும். இறுதிப்போரில் நடந்த இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர் கைதிகள், அரசியற் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். 'பொது மன்னிப்பு' என்ற 'விசர்' கதைகளை குப்பையில் போடுங்கள். யாரை யார் மன்னிப்பது ?
தமிழர் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும்.
அத்துடன் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவமயமாக்கல் நீக்கம் (விலக்கி) செய்யப்பட வேண்டும். மேலும், காணாமல்போனோவர்களுக்கான அலுவலகத்தை ஒரு நடுநிலையான, நம்பகமான நிறுவனமாக மாற்றியமைக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள் நியமிக்கும் நிபுணர்களை உறுப்பினர்களாக நியமிக்கவும், பாதிக்கப்பட்டவர் உறவுகள் பங்கெடுக்கின்ற வகையிலான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அந்நிய முதலீடுகளை தீர்மானிக்கின்ற அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.
இறுதியாக, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரு. டேவிட் கேமரூன் அவர்கள், ஸ்கொட்லாந்து விவகாரத்தில் பொது வாக்கெடுப்புக்கான உறுதியான கால அட்டவணையை அமைத்து போல், தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாமே முடிவு செய்கின்ற வகையில் பொதுவாக்கெடுப்புக்கான நடவடிக்கையினை தமிழர் அரசியல் தலைமைகளுடன் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும். இப்பொதுவாக்கெடுப்பில் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழம் உள்ளடங்க பல்வேறு அரசியல் தீர்வுகள் உள்ளடங்கலாக இருக்க வேண்டும்.
தேவையான இந்த செயல்வழிப்பாதையை சிறிலங்கா அதிபர் நிறைவேற்றிய பிறகு, பேச்சுக்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதுவே இலங்கை தீவின் நிரந்தரமான அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மற்றும் செழிப்புக்குமான வழித்தடமாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்துரைத்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களை நோக்கிய கோத்தாவின் அழைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்
Reviewed by Author
on
September 23, 2021
Rating:
Reviewed by Author
on
September 23, 2021
Rating:


No comments:
Post a Comment