நவராத்திரி இன்று ஆரம்பம்
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் ஒன்றாகும். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக இது அனுட்டிக்கப்படுகிறது.
நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன் ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
விரத காலம்
நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை(தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும்.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது.
நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி நோன்பாகும்.
வரலாற்று
மகா சங்கார(பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பியபோது இச்சை(இச்சை = விருப்பம்) என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும்(ஞானம் =அறிவு) தோன்றின. பின் கிரியா சக்தியினால்(கிரியா = செய்தல்/ ஆக்கல்) இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது.
*நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
*நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.
*இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
வழிபாட்டு முறை
ஆலயங்களிலும், இல்லங்களிலும் ஒன்பது நாட்களிலும் கும்பம் வைத்து உருவகித்து பக்திபூர்வமாக வழிபடுபவர்கள்.
விஜயதசமி
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும், இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
கன்னி வாழை வெட்டல்
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.
விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்
*தேவி மகாத்மியம்
*அபிராமி அந்தாதி
*துர்க்கா அஷ்டகம்
*இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)
*சகலகலாவல்லி மாலை
*சரஸ்வதி அந்தாதி
*மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
நவராத்திரி இன்று ஆரம்பம்
Reviewed by Author
on
October 07, 2021
Rating:

No comments:
Post a Comment