அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் முதன்முறையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று திறப்பு!

இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் இந்தப் புதிய பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய களனி பாலம் ‘கல்யாணி பொன் நுழைவு’ (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை திறக்கப்பட்ட பின்னர் கொழும்பு நகரம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பன ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டதால் கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

 இதனையடுத்து, அதிகரித்த வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போதைய களனி பாலத்தின் கொள்ளளவு போதுமானதாக இல்லாததால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்த வேளையில், 2012ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2013ஆம் ஆண்டு சாத்தியவள ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டு, 2014ஆம் ஆண்டு இலங்கையில் முதற்தடவையாக அதி தொழில்நுட்ப கேபிள்களை பாவித்து புதிய களனி பாலம் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னர் பழைய களனி பாலத்துக்கு அண்மையில் ஆறு தட வழிகளை கொண்ட புதிய பாலம் அமைக்கும் பணி பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் பாதை அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. 

 கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக பாதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து பேலியகொடை பாலத்தின் சந்தியை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய களனி பாலம் அமைக்கும் திட்டம், ஒருகொடவத்த சந்தியிலும் மற்றும் துறைமுக நுழைவு சந்தியிலும் நிறைவடைகின்றது. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையில் கொழும்பு பக்க முடிவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்ட பாதை வரை ஆறு தடவழிகளை கொண்ட இந்த பாலம் அங்கிருந்து ஒருகொடவத்த வரையும், இங்குருகடைசந்தி வரையும் துறைமுக நுழைவு பாதை வரையும் நான்கு வழித்தடங்கள் கொண்ட பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நீளம் 380 மீட்டர் ஆகும். இப்பாலம் இரண்டு தொகுதியின் கீழ் அமைக்கப்பட்டது. முதலாவது தொகுதியில் உருக்கினால் ஆன பாலத்தின் பகுதிக்கு 31 ஆயிரத்து 539 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தொகுதியில் கொங்ரீட் தொங்கு பாலம் பகுதிக்கு 9,896 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

 ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தின் ஊடாக அமைக்கப்படும் புதிய களனி பாலம் அமைக்கும் திட்டத்தில் களனிதிஸ்ஸ சுற்றுவட்ட பாதையை அண்மித்த பிரதேசம் மற்றும் புதிய களனி பாலம் முடிவிலிருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான பாதையின் இரு மருங்கையும் அலங்கரிக்க தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டதால், அலரி, தேக்கு, இலுப்பை போன்ற பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

 இவ்வாறு நடப்பட்ட மரங்களுக்கு தொடர்ந்து நீரை வழங்க நிலத்தடியிலான தானியங்கி நீர் குழாய் தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய களனி பாலம் இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பு நகரின் அழகை மேலும் அதிகரிக்க உதவும் பிரதான அம்சமாக களனி கங்கையின் அழகையும் பாலத்தையும் மெருகூட்ட உல்லாசப் பயணிகளின் கருத்தை கவரும் வகையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பாலங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் அதி தொழில்நுட்ப முறை குறித்து கவனம் செலுத்தி புதிய களனி பாலம் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.



இலங்கையில் முதன்முறையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று திறப்பு! Reviewed by Author on November 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.