அண்மைய செய்திகள்

  
-

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது. 

 வடக்கு- கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா அருகிலுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், பல்சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

 முல்லைத்தீவில் ஊடகவியலாளர், இராணுவத்தினரால் தாக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்புகள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதேபோன்று திருகோணமலை கிண்ணியா பகுதியில் படகு விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள், குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக்கருவிகளும் பறிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

 மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கோகிலனை விடுதலைசெய்ய வலியுறுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் அச்சமின்றி ஊடக கடமையினை மேற்கொள்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. சிறைப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களை விடுதலைசெய், இராணுவமே ஊடகவியலளார்கள் மீது தாக்குதல் நடத்தாதே, கிண்ணியாவில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடு, ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய இராணுவத்தினரை கைதுசெய், அரசே ஊடக அடக்குமுறையினை உடன் நிறுத்து, அரசே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு சென்ற ஊடகவியலாளர்கள், காந்திபூங்காவில் காந்தி திருவுருவச்சிலைக்கு அருகிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் Reviewed by Author on November 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.