அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலை இழிவாக இருப்பதாக ஐ.நா அலுவலர் கவலை

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடாவின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமி சந்தித்தார் இலங்கையின் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் வெள்ளியன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 எனினும், இலங்கை மலையகத் தமிழர்களுக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகள் உதவி செய்துவருவதாகவும், சர்வதேச அமைப்புகள் இம்மக்களைக் கண்டுகொள்வதில்லை என்றும் ஆளும் தரப்பு கூறுகிறது . ரோமோயா ஒபோகாடா உரையில் பேசியவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள், தேயிலை தொழில்துறையின் ஊடாக நாட்டிற்கு பாரியளவிலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றனர். ஆண்டொன்றிற்கு சுமார் 1.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை இந்த பெருந்தோட்ட துறை மூலம் வருகின்றது. இந்தியாவிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட தமிழ் மக்கள், நாட்டின் மலையக பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

மலையகத்தில் சுமார் 10 லட்சம் வரையான இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களில் சுமார் 2 லட்சம் பேர் தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறைகளில் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறைகளில் அதிகளவில் பெண் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்கள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களின் வெற்றியாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சம்பளம் கூட இன்று வரை உரிய வகையில் கிடைக்காத நிலையை எதிர்நோக்கி வருகின்றனர். மலையக தமிழர் அதேவேளை, 200 வருட காலமாக லைன்-வீடுகள் என்று அழைக்கப்படும் சிறிய, நெரிசல் மிகுந்த வீடுகளிலேயே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மிக மோசமான சுகாதார மற்றும் சமூக பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதுடன், காணி உரிமைகள் மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக ரோமோயா ஒபோகாடா தனது உரையில் கூறியுள்ளார்.

 வீட்டுத் திட்டங்களை இந்தியா அமைத்து கொடுக்கும் நிலையிலும், மலையக மக்கள் லைன் வீடுகளில் மனிதாபிமானமற்ற இழிவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் வாழ்க்கையை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தினால் 14,000 வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ள போதிலும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த வீடுகளை நிர்மாணிக்க காணிகளை பிரிந்து வழங்க வெளிப்படையாகவே தயக்கம் காட்டி வருவதாக அவர் கூறுகின்றார்.

 பெருந்தோட்ட நிறுவனங்கள் காணிகளை பிரித்து வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றமையினால், வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தாமதமடைந்து வருவதாக ரோமோயா ஒபோகாடா குறிப்பிடுகின்றார். சாதி என்ற அடிப்படையிலும் இந்த சமூகத்தின் மீதான பாகுபாடு தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருவதை அவர் உரையில் முன்னிலைப்படுத்தியுள்ளார். இதேவேளை, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிக வட்டியில் நுண்கடன்களை வழங்கி, அவர்களை நிர்கதி நிலைக்கு கொண்டு செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. பணத்தை திருப்பி செலுத்தாத சந்தர்ப்பங்களில், குழந்தை தொழிலாளர்களை தொழிலுக்கு ஈடுபடுத்தும் நடைமுறையொன்றும் உருவாகியுள்ளதையும் அவர் தனது உரையில் முன்னிலைப்படுத்தியுள்ளார். 

 நுண்கடன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறிய போதிலும், இன்று வரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ரோமோயா ஒபோகாடா தெரிவிக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடாவின் இலங்கை விஜயத்தின் போது, அவரை சந்தித்து, மலையக மக்களின் பிரச்னை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமி பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியாகும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா, கடந்த மாதம் 28ம் தேதி மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமியையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். 

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் பாரிய உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், மலையக தமிழர்கள் எந்த விதத்திலும் அவர்களினால் கண்டுக்கொள்ளப்படுவதில்லை என்பதை தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார். மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை தாம், தொழிற்சங்கம் என்ற ரீதியில், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களிடம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்வதையும் தான் கூறியதாக அவர் குறிப்பிடுகின்றார். 


 அத்துடன், தொழிற்சங்கங்கள் சந்தா பணம் பெற்றுக்கொள்வது குறித்து ரோமோயா ஒபோகாடா, பரத் அருள்சாமியிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். தொழிலாளர் நலன்களை பேணும் வகையில், மலையகம் முழுவதும் தமது தொழிற்சங்க அலுவலகங்கள் உள்ளதாகவும், அவ்வாறான அலுவலகங்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர் நலனுக்காக சந்தா பணம் பயன்படுத்தப்படுவதாகவும் தெளிவூட்டப்பட்டுள்ளது. சந்தா பணம் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ரோமோயா ஒபோகாடா உணர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் நீதிமன்றத்தை அணுகவும் வழக்குகளில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தொகைகள் பயன்படுத்தப்படுகிறதே தவிர, தனிப்பட்ட தேவைகளுக்காக அல்ல என்பதை ஐநா அதிகாரியிடம் தெரிவித்தார். 

 சந்தா பணம் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ரோமோயா ஒபோகாடா உணர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன், காணி உரிமைகளை மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் கொள்கை என்பதை தான் கூறியதாகவும் பரத் அருள்சாமி குறிப்பிட்டார். பெருந்தோட்ட முகாமைத்துவத்துக்கு வருகின்ற உயர் அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் என கூறி, ராணுவ மயப்படுத்தப்படுத்த முயற்சிக்கின்றதையும் தாம், ஐநா அதிகாரியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்ட அவர், அதனை தொழிற்சங்கம் என்ற விதத்தில் எதிர்ப்பதாகவும் கூறினார். 

 மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்தே, ஐநா அதிகாரி அதிக கவனம் செலுத்தியிருந்ததாகவும் பரத் அருள்சாமி கூறுகின்றார். இதேவேளை, மலையகத்திலுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்த ரோமோயா ஒபோகாடா, மலையக தமிழர்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே, ரோமோயா ஒபோகாடா, இந்திய வம்சாவளி தமிழர்களின் அவல நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்
இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலை இழிவாக இருப்பதாக ஐ.நா அலுவலர் கவலை Reviewed by Author on December 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.