அண்மைய செய்திகள்

recent
-

ஏழாம் எட்டாம் (7&8) நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயன்மார்களால் திருக்கேதீச்சர கோவிலுக்கு அருளிய தேவாரம் பொருள்விளக்கத்துடன்

ஏழாம் எட்டாம் (7&8) நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயன்மார்களால்  திருக்கேதீச்சர கோவிலுக்கு அருளிய தேவாரம் பொருள்விளக்கத்துடன்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுருக்க வரலாறு )


சுந்தரமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்
இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர் திருப்பாட்டினைச் 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர்.
 திருமணத்தினைத் தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார். இவர் வாழ்ந்தது கி.பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். 
இவர் பாடிய தேவாரங்கள், 7-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

 இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. 

இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார், பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.














சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்

080.திருக்கேதீச்சரம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்



இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கேதீசுவரர்.
தேவியார் - கௌரியம்மை.



812நத்தார்படை ஞானன்பசு
வேறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானையுரி
போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.1


விரும்புதல் பொருந்திய பூதப் படைகளையுடைய ஞான உருவினனும், இடபத்தை ஏறுகின்றவனும், நனைய ஒழுகுகின்ற இடங்களில் மயக்கத்தைத் தரும் மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளிய பெருமான், அன்பர்களாகிய அடியவர்கள் வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகின்றான்.


813சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.2


சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும், நல்ல பிளவாகிய பிறையையும், கீளினையும், மதம் நிறைந்த மயக்கத்தையுடைய, யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான், பாலாவி யாற்றின் கரைமேல், பாம்பு போலும் இடையினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான்.


814அங்கம்மொழி யன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.3


பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய அந்தணர்களும், தேவர்களும் வணங்கித் துதிக்க, மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல், சினத்தாற் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான்.


815கரியகறைக் கண்டன்நல
கண்மேல்ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.4


கருமையாகிய, நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும், நல்ல இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணையுடையவனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், கீற்றுக்களையுடைய சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவியாற்றின் கரைமேல், ஆராயத்தக்க வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான்.


816அங்கத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே.
7.080.5


தன் அடியார்கள் மேலனவாய், அவர்களது உடம்பிற் பொருந்துகின்ற நோய்களை முற்றக் களைந்தருள்பவனாகிய சிவபெருமான், மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், தனது திருமேனியின் ஒரு கூற்றை அழகு செய்கின்ற மங்கை ஒருத்தியுடன், பாலாவி யாற்றின் கரைமேல், தென்னஞ் சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனாய்க் காணப்படுகின்றான்.


817வெய்யவினை யாயவ்வடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.6


திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளனவற்றை முற்ற ஒழித்துநின்று, நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற, கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நகரத்தில், பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், சிவந்த சடைமுடியை உடையவனாய்க் காணப்படுகின்றான்.


818ஊனத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.7


திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியார்கள் மேலனவாய், உடம்பிற் பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று, அலைகளால் வானத்தைப் பொருந்துகின்ற, நீர் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பாலும் விரும்பத்தக்க மொழியை யுடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், பன்றியின் கொம்பை அணிந்தவனாய்க் காணப்படுகின்றான்.


819அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.8


அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய. திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது அரையில் பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரிக்கின்ற சோலைகளையுடைய 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை உடைய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் காணப்படுகின்றான்.


------------------------


 திருஞானசம்பந்தர் தேவாரம்

2.107.திருக்கேதீச்சரம்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்





சுவாமிபெயர் - கேதீச்சுவரர்.
தேவியார் - கௌரிநாயகியம்மை.



2627விருது குன்றமா மேருவில் நாணர
வாஅனல் எரிஅம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளும்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே.
2.107. 1


வெற்றிக்கு அடையாளமாக, பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி அனல் எரியை அம்பாகக் கொண்டு பொருது முப்புரங்களை எரித்த சிவபிரான் பற்றிநின்று உறையும் பதியாக அடியவர் எந்நாளும் கருதுகின்ற ஊர், ஆரவாரிக்கின்ற கடலால் சூழப்பட்ட, மணம் கமழும் பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் கருதி வழிபாடு செய்யாநின்ற திருக்கேதீச்சரமாகும். அதனைக் கைதொழின் கடுவினைகள் நம்மை அடையா.


2628பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது விருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக்
கெடுமிடர் வினைதானே.
2.107. 2


வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர். பற்பலவான புராண வரலாறுகளைக் கொண்டவர். எருது உகைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர். அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர். அவருக்குரிய இடம், கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத கேதீச்சரம் ஆகும். அதனைத் தொழ இடர்வினைகெடும்.


2629பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
கருவினை யடையாவே.
2.107.3


உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். பிறை தவழ் சடையின. திருநீற்றை விரும்பிப்பூசி. கழலும் சிலம்பும் ஆர்க்க ஆடுபவர். பாடுபவர், உண்ணும் இச்சை உடையவர் போல வீடுகள்தோறும் இடும் பிச்சைக்கு உழல்பவர். அவ்விறைவர் எழுந்தருளிய உயரிய மாதோட்டத்தில் விளங்கும் கேதீச்சரத்தை அடைபவரை இருவினைகள் அடையா.


2630பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே.
2.107. 4


திருநீறணிந்த திருமேனியர். புலித்தோலை உடுத்தவர். விரிந்த கையினில் ஏந்திய கூரிய முத்தலைச்சூலத்தை உடையவர். முப்புரி நூல் அணிந்தவர். மறித்துவரும் அலைகளைக் கொண்ட கடல் சூழ்ந்த மாதோட்ட நகரில் எழுந்தருளி விளங்கும் அடிகள். அவர் விரும்பி எழுந்தருளிய கேதீச்சரத்தை அன்புகொண்ட மனத்தராய் வணங்கும் அடியவர்மேல் பற்றித் திரண்டு வரும் வினைகள் நீங்கிப்போகும்.


2631நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம்
மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்
தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும்
அன்பராம் அடியாரே.
2.107.5


மிகவும் நல்லவர். ஞானம் நன்கு உடையவர். தம்மை அடைந்தவர்கட்கு அருளிய வல்லவர். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பிறத்தல் இறத்தல் இல்லாதவர. நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட மாதோட்டத்து எல்லையில்லாத புகழை உடைய எந்தையாகிய அவரது கேதீச்சரத்தை இரவும் பகலும் நினைந்து போற்றித் துன்பம் குற்றம் அற்றவர்களாய் அவ் அரனடியினை தொழும் அன்புடையவரே அடியவர் ஆவர்.


2632பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
தீச்சரம் பிரியாரே.
2.107. 6


பெருமை பொருந்திய நீண்ட சடையின்கண் பெருந்திருவினளாகிய கங்கையை மறைத்து வைத்து, தம் திருமேனியின் ஒரு பாகமாகிய அழகிய கயல் போலும் கண்ணினள் ஆகிய உமையம்மைபால் கருணை காட்டும் இயல்பினராகிய இறைவர் வாழைத் தோட்டங்களில் பழுத்த பழங்களை உண்ண மந்திகள் களிப்புற்று மருவிய மாதோட்டத்தில், பன்றியின் வெண்மையான கொம்பினை அணிந்துள்ள அகன்ற மார்பினராய்க் குடி கொண்டு வாழும் இடமாகக் கொண்டு கேதீச்சரத்தில் பிரியாது உறைகின்றார்.


2633பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்
காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை
நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே
தீச்சர மதுதானே.
2.107.7


முற்காலத்தில் நால்வர்க்கு அறம் உரைத்தருளிப் பல உலகங்களிலும் பிறந்துள்ள உயிர்களின் வாழ்க்கைக்குரிய ஊழை அமைத்தருளிய நாதனார், கடல் சூழ்ந்த இவ்வுலகிலுள்ளோர் கண்டு கைதொழுமாறு விரும்பி உறையும் கோயில், வண்டுகள் பண்ணிசைக்கும், சிறந்த மலர்கள் நிறைந்த பொழில்களில் மயில்கள் நடனமாடும் மாதோட்டத்தின்கண் தொண்டர்கள் நாள்தோறும் துதிக்க அருள் புரியும் கேதீச்சரமாகும்.


2634தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்
தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே
தீச்சரத் துள்ளாரே.
2.107. 8


தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன்முடி, தோள் ஆகியன அழகிழக்குமாறு அடர்த்துப் பின் அவனது பாடல்கேட்டு அருள்செய்த தலைவனார், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரை அடைந்து அன்பர்கள் இறைஞ்சி வழிபடும் கேதீச்சரத்து உள்ளார்.


2635பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
திருந்தஎம் பெருமானே.
2.107.9


மா, கமுகு, வாழை ஆகியன செறிந்த மாதோட்ட நன்னகரில் நிலையாக, தேவியோடும் அழகிய கேதீச்சரத்து விளங்கும் எம்பெருமானே! தாமரை மலரில் உறையும் நான்முகனும், கடல் வண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து ஓடியும் உன் திருவடி இணைகளைக் காணாதவாறு உயர்ந்து நின்ற உன் திறமை யாதோ? இஃது எதிர் நிரல் நிறை.


2636புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட வுரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே.
2.107.10


புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர். மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தவர் ஆகிய, மாதோட்டத்துள் பாலாஒவியின் கரைமேல் விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடையுங்கள்.


2637மாடெ லாமண முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத்
தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின்ப த்தர்கள்
பரகதி பெறலாமே.
2.107. 11


அருகிலெல்லாம் மணமுரசு ஒலிப்பதுபோலக் கடல் ஒலி நிரம்பப் பெற்றமாதோட்டத்தில், வலிய ஏற்றினை உடைய தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழி நாட்டினர்க்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய இப்பாமாலையைப் பக்தர்களே! பாடி வழிபடுமின். பரகதி பெறலாம்.


திருச்சிற்றம்பலம்




மூலம் - 















ஏழாம் எட்டாம் (7&8) நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயன்மார்களால் திருக்கேதீச்சர கோவிலுக்கு அருளிய தேவாரம் பொருள்விளக்கத்துடன் Reviewed by NEWMANNAR on March 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.