ஜனாதிபதி யார்? தீர்மானம் இன்று(20)…
1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று(20) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்ட போது, வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக அப்போதைய பிரதமராகவிருந்த D.B.விஜேதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதியாக தெரிவானார்.
இந்நிலையில், இன்று(20) புதிய ஜனாதிபதி ஒருவர் இரகசிய வாக்கெடுப்பினூடாக தெரிவு செய்யப்படவுள்ளார்.
3 உறுப்பினர்கள் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுவதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று சந்தர்ப்பங்களில் தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும்.
அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
இதேவேளை, தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கும் ஆதரவளிக்கும் வகையில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இடையில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இன்றைய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் இரகசிய வாக்கெடுப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.
எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு நாட்டை நிர்வகிக்கும் தகுதியைப் பெறவுள்ள வேட்பாளருக்கும் ஜனாதிபதி வேட்பாளரொருவர் பொதுமக்களால் தேர்தலூடாக தெரிவு செய்யப்படும் போது கிடைக்கும் சகல அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளன.
அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி தமது விருப்பத்திற்கு அமைய இராஜினாமா செய்யாவிடின், குற்றப்பிரேரணையின் மூலமே அவரை பதவியிலிருந்து நீக்க முடியும்.
ஜனாதிபதி யார்? தீர்மானம் இன்று(20)…
Reviewed by Author
on
July 20, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment