அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது - டேட்டிங் செயலியில் அறிமுகமானவருடன் முதல் சந்திப்பிலேயே அத்துமீறியதாக சர்ச்சை

டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று அதிகாலையில் (நவம்பர் 6) ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் தன்னிடம் அத்துமீறி பாலியல் வல்லுறவில் தனுஷ்க ஈடுபட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்திடம் தோல்வியுற்ற இலங்கை போட்டியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.

 முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதி தன்னை ரோஸ் பேயிலிலுள்ள வீடொன்றில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயற்சித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ செளத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியுள்ளது. ஆனால், அதில் கைதான இலங்கையரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. "கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை 5 நவம்பர் 2022), 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கீழ் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டுள்ளது. "ஆன்லைன் டேட்டிங் விண்ணப்பம் மூலம் பல நாட்களாக சம்பந்தப்பட்ட பெண்ணுடன் அந்த நபர் தொடர்பு கொண்டுள்ளார். பிறகு அந்தப் பெண் அவரைச் சந்தித்தார்; நவம்பர் 2ஆம் தேதி புதன்கிழமை மாலையில் அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று ரோஸ் பேவில் உள்ள முகவரியில் குற்றச் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை 6 நவம்பர் 2022) அதிகாலை 1 மணிக்கு முன்னதாக சிட்னி, சஸ்ஸெக்ஸ் தெருவில் உள்ள விடுதியில் இருந்த 31 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிட்னி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது பெண்ணின் அனுமதியின்றி அவருடன் உறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த இலங்கை பிரஜை இன்று பரமட்டா பிணை நீதிமன்றத்தில் ஆஜராக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது," என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டி20 உலக கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த தனுஷ்க குணதிலக்க, முதல் சுற்றுப் போட்டிகளின் போது உடல் உபாதைக்கு ஆளானார்.

 இதனால் அவருக்குப் பதிலாக அசான் பண்டார, இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே தனுஷ்க தங்கியுள்ளார். இந்த நிலையிலேயே, தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமான தனுஷ்க குணதிலக்க, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 8 டெஸ்ட் போட்டிகளிலும், 47 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 46 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 

 இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது. இவ்வாறு தோல்வியை தழுவிய இலங்கை அணி இன்றைய தினம் தாயகத்துக்கு வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ்க குணதிலக்க தவிர்ந்த, ஏனைய அனைத்து வீரர்களும் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளனர்.இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க கைதான தகவலை இலங்கை அணியிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முறைப்படி உறுதிப்படுத்தியிருக்கிறது. 

 இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க குணதிலக்க நவம்பர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஐசிசியுடன் ஆலோசனை நடத்தி நீதிமன்ற நடைமுறைகளை மிகவும் நெருக்கமாக கவனித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. விரிவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது - டேட்டிங் செயலியில் அறிமுகமானவருடன் முதல் சந்திப்பிலேயே அத்துமீறியதாக சர்ச்சை Reviewed by Author on November 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.