அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நீதிமன்றில் சான்றுப்பொருட்களான நகைகள் மாயம்! வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற இரு உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை

 வவுனியா நீதிவான் நீதிமன்றின் இருவேறு கொலை வழக்குகளின் சான்றுப்பொருள்களான தங்க நகைகள் காணாமற்போனமை தொடர்பில் அந்தக் காலப்பகுதியில் சான்றுப்பொருள் காப்பாளர்களாகக் கடமையாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய, குறித்த இருவரும் தற்போது வெளிநாட்டிற்கு தப்பித்துள்ள நிலையில் நாடுகடத்துவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கவேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம், வவுனியா நீதிவான் நீதிமன்றம் மற்றும் வவுனியா மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை வழங்கியுள்ளார்.

ஓமந்தை இரட்டைக் கொலை வழக்கு மற்றும் சமளங்குளம் இரட்டை கொலை வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்த வழக்குகளில் புதன்கிழமை இவ்வாறு சிறப்பு கட்டளை மன்றினால் வழங்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வவுனியா சமளங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து இருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சிறப்பு கட்டளை ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களம், வவுனியா நீதிவான் நீதிமன்றம் மற்றும் வவுனியா மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கினார்.

அதாவது, “இந்த வழக்குடன் தொடர்புடைய சான்றுப்பொருளான நகைகள் (உருக்கப்பட்ட நிலையில்) பொலிஸாரினால் வவுனியா நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள் காப்பாளர் சிவதாஸ் அணுகாந்த் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் அந்த நகைகள் காணாமற்போய்விட்டதாக வவுனியா நீதிவான் நீதிமன்றினால் மேல் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி வழக்கு விசாரணையில் முற்பட்ட வவுனியா நீதிவான் நீதிமன்றின் தற்போதைய சான்றுப்பொருள் காப்பாளர், அந்த நகைகள் தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று வாக்குமூலமளித்தார்.

நகைகளை பாரமெடுத்த சான்றுப்பொருள் காப்பாளர் சிவதாஸ் அனுகாந்த் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கனடா நாட்டில் வசிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளை முன்னெடுத்து நாடுகடத்துவதற்கான உத்தரவுகளைப் பெற சட்டமா அதிபர் திணைக்களம், வவுனியா நீதிவான் நீதிமன்றம் மற்றும் வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் முன்னெடுக்க வேண்டும்” என்று சிறப்பு கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி வவுனியா ஓமந்தை – பன்றிக்கெய்த குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து இருவரை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சிறப்பு கட்டளை ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களம், வவுனியா நீதிவான் நீதிமன்றம் மற்றும் வவுனியா மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு புதன்கிழமை (31) வழங்கினார்.

“இந்த வழக்குடன் தொடர்புடைய சான்றுப்பொருளான நகைகள் பொலிஸாரினால் வவுனியா நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள் காப்பாளர் நவரட்ணம் முருகதாஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் அந்த நகைகள் காணாமற்போய்விட்டதாக வவுனியா நீதிவான் நீதிமன்றினால் மேல் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி வழக்கு விசாரணையில் முற்பட்ட வவுனியா நீதிவான் நீதிமன்றின் தற்போதைய சான்றுப்பொருள் காப்பாளர், அந்த நகைகள் தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று வாக்குமூலமளித்தார்.

நகைகளை பாரமெடுத்த சான்றுப்பொருள் காப்பாளர் என்.முருகதாஸ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளை முன்னெடுத்து நாடுகடத்துவதற்கான உத்தரவுகளைப் பெற சட்டமா அதிபர் திணைக்களம், வவுனியா நீதிவான் நீதிமன்றம் மற்றும் வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் முன்னெடுக்க வேண்டும்” என்று சிறப்பு கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வவுனியா நீதிமன்றில் சான்றுப்பொருட்களான நகைகள் மாயம்! வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற இரு உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை Reviewed by Author on June 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.