உணவக உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் !
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம் பௌசாத் அவர்களினால் உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரமான உணவை வழங்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடலொன்று இன்று (21) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம் பீ ஏ வாஜித் அவர்களும் தெரிவு செய்யப்பட்ட பிரிவுத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் தத்துமது பிரிவுகளினால் முன்னெடுக்கப்படும் செயற்றிடங்கள் தொடர்பிலும் உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரமானதும் சுத்தமானதுமான உணவினை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் விவரித்தனர்
இக்கலந்துரையாடலுக்கு கல்முனை தெற்கு கல்முனை வடக்கு சாய்ந்தமருது நாவிதன்வெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளுக்கு உட்பட்ட உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கான நேரமும் வழங்கப்பட்டிருந்தது
இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதிப் பணிப்பாளரும், பிரிவுத் தலைவர்களும் உணவகங்களின் மேம்பாடு தொடர்பில் விரிவான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். விசேடமாக உணவகங்களில் உணவு தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைகள், தொற்றா நோய்களை தவிர்ப்பதற்கான உணவு முறைமைகள் மற்றும் உணவினை தயாரிக்கும் நபர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் பற்றியும் பிளாஸ்ரிக் அற்ற உணவக சற்றுச்சூழலை பின்பற்றுவதன் அவசியத்தைப் பற்றியும் விரிவாக விளக்கியிருந்தனர்
மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர் அவர்கள் உடலுக்கு ஆரோக்கியமான உணவினை வழங்குவது நம்மீதான முதற்கடமை என்றும் அதற்காக மரபு ரீதியான நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் உணவினை வழங்குவதென்பது ஒரு தாயின் பணி இதனை இதய சுத்தியுடன் செய்யும் போது உங்களுக்கு இலாபமும் கிடைக்கும் வாழ்வில் ஏனைய செல்வ செழிப்புக்களும் கிடைக்கும் எனவே சட்ட நடவடிக்கைகள் எடுப்பதை விட வாழ்வியலில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே நேர்மறையான விளைவுகள் ஏற்படும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
உணவக உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் !
Reviewed by Author
on
July 21, 2023
Rating:

No comments:
Post a Comment