சிலாவத்துறை- கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் நேற்று புதன்கிழமை (29) அதிகாலை கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கைகளின் போது 04 டிங்கி படகுகள், சுமார் 1670 கடலட்டைகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
மீன் வளத்தின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடல் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் படி வடமேற்கு கடற்படையினர் கொண்டச்சிக்குடா பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் கல்பிட்டி, சிலாவத்துறை, வங்காலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 23 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 12 பேர், கடலட்டைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment