ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11 ஆவது தேசிய மாநாடு நாளை (24.03) வவுனியா மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி கட்சியின் முக்கிய பதவிநிலைகள், தலைமைக்குழு, நிர்வாக குழு, மத்திய குழு என்பவற்றுக்கான தெரிவு இடம்பெற்றது. வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இருந்தும் பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைக்கான குழுக்களையும் பதவி நிலைகளையும் தெரிவு செய்துள்ளனர். மிகவும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், கட்சியினுடைய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த தெரிவு இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் தலைவராக தொடர்ந்தும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், செயலாளர் நாயகமாக பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), தேசிய அமைப்பாளராக பிரசன்னா இந்திரகுமார், உப தலைவராக ஹென்றி மகேந்திரன், நிதிச் செயலாளராக சுரேன் குருசாமி, நிர்வாக செயலாளராக விந்தன் கனகரத்தினம், இளைஞரணி செயலாளராக செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்காலத்தில் கட்சியின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment