யாழ்ப்பாணத்தில் அனுமதி இன்றி பாழடைந்த வீட்டில் நடத்தப்பட்டு வந்த சிறுவர் இல்லம்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த தை மாதம் 03 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் கடந்த மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன் , ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில் , மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே படுத்து தூங்கி எழும்பும் நிலை காணப்பட்டுள்ளது.
அத்துடன் மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள் , குறித்த வீட்டில் இருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.
அதேவேளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் , யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பெறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலையே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது.
அதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment