அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் மரணம் தொடர்பான விசாரணை குழுவின் விசாரணை நிறைவு-தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  பட்டதாரியான இளம் தாய் ஒருவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


மன்னார்  - தம்பனைக்குளம்  பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தார்.  


இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி    ஞாயிற்றுக்கிழமை    இடம் பெற்றுள்ளது.


மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த  மரியராஜ் சிந்துஜா வயது (27)  என தெரிய வந்துள்ளது.


குறித்த பெண்ணின் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.


குறித்த மரணம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.விசாரணைகளின் அடிப்படையில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக விசேட அறிக்கை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.


குறித்த பெண் மரணமடைந்ததை தொடர்ந்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன்  தவறிழைத்தவர் களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.


கொலை அச்சுறுத்தல்


மேலும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து எனது தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.


குறித்த அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்




மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் மரணம் தொடர்பான விசாரணை குழுவின் விசாரணை நிறைவு-தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். Reviewed by Author on August 06, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.