பிரதான 5 விடயங்களுடன் வெளியானது ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமானது.
“இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” என்ற தலைப்பிலான விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் ஆரம்பமானது.
இதன்போது, இந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கைக்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அல்லது குழப்பம் மற்றும் நிலைக்குத் திரும்புவதற்கு இடையிலான தெரிவாகும், இலங்கையர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை நான் அறிவேன். ஆனால் இந்த பயணத்தில் நாம் நீண்ட தூரத்தை கடந்திருக்கிறோம் என இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2022 நெருக்கடிக்குப் பிறகு நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். இந்த பயணத்தின் அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் என்னிடம் மட்டுமே உள்ளது. உங்கள் வாக்கு மூலம் ஒருங்கிணைந்த இலங்கையை பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு கொண்டு செல்வேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதானதமாக ஐந்து விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்,
வாழ்க்கை சுமையை குறைத்தல்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 2022 ஆம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளன. தொடர்ந்து குறையும். அதே சமயம் குடும்பச் சுமையும் படிப்படியாகக் குறைகிறது. எனது திட்டம் அத்தியாவசிய பொருட்களின் மீதான வரிகளை நீக்கி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். அதே சமயம் நமக்குத் தேவையானதை இறக்குமதி செய்யவும் வாய்ப்பளிக்கும்.
புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் அதிக சம்பளம்
புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், இதனால் தொழில் சந்தை விரிவடையும். இது தவிர, புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
உங்கள் வரிச்சுமை குறையும்
எதிர்காலத்தில் தொழில் வல்லுநர்களுக்கு வரியில்லா சேவை சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மறைமுக வரிகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்த வரிகளை படிப்படியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த இரண்டு பணிகளையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தி, வரி செலுத்துவோருக்கு வரிச் சலுகை வழங்குவேன்.
பொருளாதாரத்திற்கான திட்டம்
நமது பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது, ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. எனது திட்டம் முதலீட்டுக்கு உகந்தது, அதாவது சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் மேலதிக பயிற்சி போன்ற நமக்குத் தேவையான சேவைகளைப் பெற முடியும் - நமது பொருளாதார முன்னேற்றம் நிலையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்கும்.
உறுமய மற்றும் அஸ்வெசும திட்டங்கள்
உறுமய மற்றும் அஸ்வெசும திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். அதனால் நிலைப்பும் செழிப்பும் உருவாகும்.
புதிய இணையத்தளம் அறிமுகம்
மக்களுக்கு தேவையான விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தலை முன்னிலைப்படுத்தும் விதமாக புதிய இணையத்தளம் ஒன்றும் ரணில் விக்கிரமசிங்கவால் சற்றுமுன் திறந்தவைக்கப்பட்டது.
குறித்த இணையத்தளத்தில் ரணிலில் முழுமையான தேர்தல் விஞ்ஞாபனத்தை காணக்கூடியதாக இருக்கும்.
Reviewed by Author
on
August 29, 2024
Rating:


No comments:
Post a Comment