அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் உடல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது

 வவுனியா வைத்தியசாலையில்  இறந்த சிசுவின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி தி. திருவருள் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,


வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்த சிசுவின் உடலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்வதற்கு ஏற்பட்ட இழுபறி நிலைமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலமாக தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிசுவின் சார்பில் நான் இன்றைய தினம் ஆஜராகி சிசுவின் சடலத்தை யாழ். வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுசெல்வதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில்  கெளரவ மன்றுக்கு தெளிவுபடுத்தியிருந்தேன்.


கௌரவ மன்று குறித்த விசாரணையில் மிகவும் உன்னிப்பாகவும் அவதானத்துடனும் செயற்பட்டு குறித்த சிசுவின் உடலினை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு உரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கூறியதன் பிரகாரம் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக  ஒழுங்குபடுத்தி தந்திருந்தார். 


சிசுவின் சடலத்தினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று ஒப்படைப்பதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.


அதன் பிரகாரம், மன்றானது குறித்த சிசுவின் மரண விசாரணையை திறம்பட செய்யுமாறும் அதனுடைய அறிக்கையினை எதிர்வரும் ஒன்பதாம் மாதம் நான்காம் திகதி அல்லது அதற்கு முன்னர் கௌரவ மன்றிலே சமர்ப்பிக்க வேண்டுமென பொலிஸாருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.


மேலும் சிசுவின் உடலினை நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்குமாறும் மன்றின் கட்டளை இல்லாமல் சிசுவினுடைய உடலில் எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ளாமல் கவனமாக வைக்குமாறும் பொலிஸாருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த மருத்துவ அறிக்கையிலே திருப்தியின்மை காணப்படுமாக இருந்தால் மேலதிக மருத்துவ பரிசோதனை தொடர்பாக வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் மன்று உத்தரவாதம் வழங்கியுள்ளது என்றார். 




வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் உடல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது Reviewed by Author on August 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.