அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் பரவும் அபாய காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

 யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



திடீர் என நோய் தீவிரத்தன்மை அதிகரிப்பு

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட இவர்கள், நோய் திடீரெனத் தீவிரத்தன்மை அடைந்து உயிரிழந்துள்ளனர்.




இவர்களின் சுவாசத் தொகுதி கடும் பாதிப்படைந்துள்ளமை மருத்துவ அறிக்கைகளில் தெரியவந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் வரணி வடக்கு பகுதியை சேர்ந்த கோகிலான் தவராசா (வயது 60) மூன்று தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.


அதேபோன்று பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.



அதேவேளை காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார்.


நாவற்குழியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.


 சாதாரண காய்ச்சல் நிலைமையில் இருந்த இவர்களுக்கு திடீர் என நோய் தீவிரத்தன்மை அதிகரித்ததை அடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.


 சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக சோதனை

பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.




அங்கு நோய்த் தன்மை சடுதியாக தீவிரமடைந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வந்த நால்வரும் உயிரிழந்தனர்.


இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக் காய்ச்சலாக இருக்கலாம் என்றும் கருதப்படும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக சோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.


இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தபோது, மூன்று நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது என்று தெரிவித்தார்.


ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம்

மேலும், கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.


கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.





ஆனால், இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம்.


கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்த பின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும்.


ஆயினும், பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம்.


இந்நிலையில், பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம் என்பதுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது.


அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதி வாய்ந்த வைத்தியரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




யாழ்ப்பாணத்தில் பரவும் அபாய காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை Reviewed by Author on December 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.