மீனவர் சமூகத்தின் உரிமைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு பேரணியுடன் சர்வதேச மீனவர் தின நிகழ்வுகள்
சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச மீனவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறது
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இலங்கையின் பதினாறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகிறது
முல்லைத்தீவு நகர கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி முல்லைத்தீவு நகர சுற்றுவட்டப் பகுதிக்கு சென்று முல்லைத்தீவு நகரில் உள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாச்சார மண்டபம் வரை சென்று அங்கு நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது
"மீனவசமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்" என்னும் தொனிப்பொருளில் குறித்த கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்தியன் இழுவைமடி ஆக்கிரமிப்பை நிறுத்துதல், மீனவசட்டத்தை உடன் அமுல்படுத்துதல், சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளை முற்றாக தடைசெய்தல், கனியமணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பண்ணைவளர்ப்புத் திட்டங்களை நிறுத்துதல், காற்றாலை மின்சாரத் திட்டத்தைத் தடை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளைத் தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.
வன்னிபாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 16மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment