அண்மைய செய்திகள்

recent
-

விமான நிலையத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு ஏற்பட்ட இடையூறு குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது

 >தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழ் மக்களின் பிரதிநிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமைக்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.


வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க முன்னிற்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கடந்த ஜனவரி 11ஆம் திகதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டுக்குச் சென்ற இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.


தனது கடவுச்சீட்டை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் (CTID) அதிகாரிகள் பரிசோதிக்க வேண்டும் என அதிகாரிகள் தமக்கு அறிவித்ததாக ஜனவரி 21ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.


“எனது கடவுச்சீட்டில் குறைபாடு உள்ளதாகவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் விசாரணைக்கு என்னை உட்படுத்த வேண்டுமெனவும் தெரவித்த விமான நிலைய அதிகாரிகள் எனக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதன்போது என்னுடன் இணைந்து விமான நிலையம் வந்திருந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தலையீட்டின் பயனாக நீண்ட விசாரணைகளின் பின்னர் விமானம் புறப்படத் தயாராகிய இறுதி நேரத்தில் என்னை இந்திய பயணத்திற்கு அனுமதித்தனர்.”


இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய சமயத்தில் இதுத் தொடர்பில் அதிகாரிகளிடம் வினவியபோது பயணத் தடை விதிக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக தெரிவித்த சிறீதரன், எனினும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.


“எனினும் 2025 ஜனவரி 13ஆம் திகதி இந்தியாவில் இருந்து நாடு திரும்பியபோது குறித்த பயணத் தடை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவியபோது அவ்வாறான பயணத் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தனர். நீதிமன்ற கட்டளைகள் எதுவுமின்றி சபாநாயகராகிய தங்களின் ஆலோசனைகள் எதுவுமின்றி எனக்கு பயணத்தடை உள்ளதென குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டமை திட்டமிட்ட வகையிலான சிறப்புரிமை மீறல் என்றே நான் கருதுகின்றேன். மக்கள் பிரதிநிதியாக எனக்கு இருக்கும் சிறப்புரிமையை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணி குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்புகின்றேன்.”


இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமும், இலங்கை  தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் எதிர்கொள்ள நேர்ந்த இடையூறினை உறுதிப்படுத்தினார்.


“இந்தச் சம்பவம் நடந்தபோது, தமிழக முதல்வரின் அழைப்பின் பேரில் அவருடன் பிரபு முனையத்தின் ஊடாக வெளியேற முனைந்த சமயத்தில்தான் இது நடந்தது. குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகளும், பிரபு முனைய அதிகாரிகளும் பயணத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறியபோது. நான் அவர்களிடம் பேசினேன், ஏதேனும் விமான பயணத் தடை இருந்தால், அது குறித்து வழக்கு ஒன்று இருக்க வேண்டும்.”


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் சட்டத்தை பேணுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்றில் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.


“அது மட்டுமின்றி, இப்போதும் உங்கள் அரசு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையே நடைமுறைப்படுத்துகிறது. அந்தச் சட்டத்தின்படி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தாம் விரும்பியபடி இதுபோன்று செயற்பட முடியாது. ஏனென்றால் நீதிமன்ற உத்தரவு இருக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படும்போது, நீதிமன்ற உத்தரவைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, எனவே இது எம்.பி.க்களின் உரிமை மீறல் மட்டுமல்ல, அவருக்கு நடந்த பெரிய அநீதி.  நாம் பேசி தீர்வுக்கு வந்திருந்தாலும், உரிய விசாரணை நடத்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."


PTA வை எச்சரிக்கையுடன் பயன்படுத்துதல்


இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.


“அதேபோல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்கள் இலட்சியமோ கொள்கையோ அல்ல, ஆனால் புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை நாட்டின் சட்டங்களை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் சட்ட மூலத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்.”


நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வெளிநாட்டுப் பயணத்தை விமான நிலையத்தில் தடுத்தமை தொடர்பில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


“எனக்கு விமான நிலையத் தலைவருடன் நேரடித் தொடர்பில்லையென்றாலும், இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் இடம்பெற்றது, எனவே இது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு அவரிடம் கோரியுள்ளேன். இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவிடம் தெரிவித்தேன். மேலும் இது இமிக்ரேசனுடன் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையை இமிக்ரேசனுக்கு அனுப்பி, உங்களிடமிருந்து சிறப்புரிமைக் குழுவிற்கு கிடைத்த கடிதத்தை எமக்கு கையளித்தால் அமைச்சர் ஊடாக அதனை அனுப்ப முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.”


தமிழ் மக்கள் பிரதிநிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தடுத்தமை தொடர்பில் அரசாங்கத்தின் வருத்தத்தை தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த தடையானது அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இடம்பெறவில்லை என வலியுறுத்தினார்.


"எனவே, இறுதியாக, நா.உ சிறீதரனுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். ஆனால் இது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பயன்பாடா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரும் அதனை சொல்லவில்லை. அவ்வாறு அவர் வரும்போது இவ்வாறான ஒன்றுக்கு அவர் உள்ளாகவில்லை. எனவே, நிச்சயமாக இது அரசாங்க கொள்கை அல்லது அரசாங்க வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல.”


எவ்வாறாயினும், உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்கு தாம் முன்நிற்பதாக சபை முதல்வர்  நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.




விமான நிலையத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு ஏற்பட்ட இடையூறு குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது Reviewed by Author on January 24, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.