செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் யாருடையது என்பது வெளிப்படுத்தப்படவில்லை
இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே இடம்பெற்றிருந்த, பொதுமக்கள் அடையாளம் காணும் காட்சிப்படுத்தலில் பங்கேற்ற இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், 16 வருடங்களுக்கும் மேலாகத் தேடியலையும் தமது உறவினர்கள் பயன்படுத்திய எந்தப் பொருளையும் கண்டுபிடிக்காமல் வீடு திரும்பியுள்ளனர்.
யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் உத்தரவிற்கு அமைய, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சில பொருட்களை 2025 ஓகஸ்ட் 5 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்குக் காண்பிப்பதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய பொருட்கள் தனிமனிதர்களுடன் தொடர்புபடாத காரணத்தினால் அவை காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், பார்வையிட்ட மக்களின் உறவினர்களுடன் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த எந்தப் பொருளும் தொடர்புபட்டிருக்கவில்லை.
மேலும், எதிர்கால அகழ்வாய்வின் போது சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேலும் பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால், இதுபோன்ற காட்சிப்படுத்தல் மீண்டும் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சட்டத்தரணி ரணிதா கூறினார்.
பிற பொருட்களின் கண்காட்சியில் பங்கேற்ற பாதிக்கப்பட்டவர்களை ஒளிப்பதிவு செய்ய, ஊடகங்களுக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்படவில்லை.
மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியான செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் உள்ளதா என்பதை அறிய நேற்றும் நேற்று முன்தினமும் (ஓகஸ்ட் 4, 5) ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் உதவியுடன் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் அகழ்வாய்வு குறித்து அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள புதைகுழித் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 31வது நாளான ஓகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை பிற்பகலில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 130 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments:
Post a Comment