இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன.
இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர்,
பொருளாதார ரீதியில் இலங்கை வேகமாக முன்னேறி வருகின்றது என தரவுகள் கூறுகின்றன. அதேபோல இலஞ்ச, ஊழல் ஒழிக்கப்பட்டு வருகின்றது. இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது.
இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும். அவ்வாறு நடந்தால் இலகுவில் முன்னோக்கி சென்று விடலாம். இதனையே எமது ஜனாதிபதி தோழர் எல்லா இடங்களிலும் வலியுறுத்தி வருகின்றார்.
எனவே, இந்த இனவாதம் என்ற பிசாசுக்கு எமது நாட்டில் நிரந்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்கும் போது பழைய பிசாசுகள் மீண்டெழுவதை காண முடிகின்றது.
பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். அதிகாரத்துக்கா சதி மற்றும் சூழ்ச்சிகளை செய்ய முடியுமா என்பது பற்றி ஆராய்கின்றனர்.
இனவாதத்தை தூண்டியேனும் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது பற்றியும் கதைக்கின்றனர். இது பற்றியே ரணிலும், மகிந்தவும் அவரது வீட்டில் மந்திராலோசனை செய்கின்றனர்.
ரணிலும், மகிந்தவும் நம்பர் வன் திருடர்கள். கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்தான் ரணில். இந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாத்தவர்தான் ராஜபக்ச.
எனவே, இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment