மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
1979 ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 02ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை நடத்திச்செல்ல குறித்த சேவைகள் அத்தியவசியமானவை என்பதையும் அந்த சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதை கருத்திற்கொண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
24 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடன் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 25ஆம் திகதி முதல் சுகயீன விடுமுறை, சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையின் மூன்றாவது கட்டமாக அனைத்து பெறுகை செயற்பாடுகளிலிருந்தும் விலகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment