அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன – எஸ்.சிறீதரன்

 ”கல்வி திட்டத்தில் வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழரின் வரலாறுகள் மற்றும் தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இவற்றுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக அமைய கூடாது.”


இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் பிரதமரிடம் வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ், பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு வினவினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


”புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமய பாடத்தில் சைவ சமயம் சீராக முன்னெடுக்கப்படவில்லை. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழர் வரலாறு மற்றும் தமிழ் மொழி இலச்சினைகள் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வுகள் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கொண்டு வரப்படுமா?


இலங்கையன் கல்வித்துறையில் கலைத்திட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இப்பொழுது கொண்டு வரப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பான சில விளக்கமூட்டும் கூட்டங்களும் தங்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. ஆனால் புதிய கலைத்திட்டம் மாணவர்களுக்கு சுமையைக் குறைப்பதாகவும், கல்வியில் புதிய புத்தாக்கத் தேடல்களைக் கொண்டு வருவதற்கான வழிமுறையாகவும் இருக்குமென கூறப்படுகின்றது.


தரம் 06 இற்கு 15 கட்டாய பாடங்கள், தெரிவு பாடங்கள் 03 என 18 பாடங்களாயின் நேர அட்டவணை தயாரிப்பதில் உள்ள இடர்பாடுகள், நிலை மாற்றுத் திறன்களில் மாணவன் 2 பாடங்களைத் தெரிவு செய்தல், இவ்வளவு காலமும் தவணைக்கு 265 மணித்தியாலங்களாக இருந்த மாணவனின் கற்றல் நேரம் தற்போதைய புதிய கலைத்திட்ட வரவால் 365 மணித்தியாலங்களாக வர உள்ளது. இதுவரை காலமும் இருந்ததை விட மாணவனுக்கு 30வீத சுமை அதிகரித்துள்ளது.


அத்துடன் புதிய கல்விக் கலைத்திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? அதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? தேசிய கல்வி நிறுவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கல்வி சார் அலுவல்கள் சபை, கல்விப் பேரவைக்குழு’ இரண்டிலும் தமிழ் மொழி சார்ந்த உத்தியோகத்தர்கள் யாராவது உள்ளடக்கப்பட்டுள்ளார்களா? மற்றும் கலைத்திட்டக் கொள்கை அல்லது வெள்ளையறிக்கை சம்பந்தமான விடயங்களில் ஈடுபடுகிறவர்களின் பெயர்ப்பட்டியலைச் சபைக்குச் சமர்ப்பிக்க முடியுமா? அத்துடன்,புதிய கல்வி சீர்திருத்த அமுலாக்க குழுவில் தமிழ் மொழிமூலம் உள்ள பேராசிரியர்கள், பாட நிபுணத்துவம் கொண்டவர்கள் எத்தனை பேர் உள்ளடங்கியுள்ளார்கள்? என்பதனை கேட்கின்றேன்.


இதேவேளை கல்வி அமைச்சில் தமிழ் மூலமான உத்தியோகத்தர்கள் 20 துறைகளில் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. அதேபோன்று சைவ சமய பாடத்தில் நடராஜரின் வடிவத்தை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கும் போது சிலர் இதனை எதிர்ப்பதாக அறிகின்றோம். நீங்கள் ஒவ்வொரு பாடத் துறைகளிலும் அது தொடர்பான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள், சமய நிறுவனங்களையும் அழைத்து எங்களுடனும் கூட்டத்தை ஏற்பாடு செய்து தீர்மானங்களை எடுக்குமாறு கேட்கின்றேன். அத்துடன் வரலாறு, சித்திரம் பாடங்களில் தமிழர்களுடைய வரலாறுகள், அடையாளங்கள், மன்னர்களின் பெயர்கள் நிறைய இல்லாமல் செய்யப்படுகின்றது. அந்த விடயங்களில் உங்களின் கரிசனைகளை அறிய முடியுமா?”- என்றார்.


இதற்கு எழுந்து பதிலளித்த பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி


”2026 ஜனவரியில் முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடத்திட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் இந்தத் திருத்தங்கள் செயல்படுத்தப்படும். முழுமையான திருத்தங்களைப் பற்றிய முழு ஆவணம் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் சமயம், வரலாறு உள்ளிட்ட பாடங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட கல்வி குழுக்களுடன் கலந்துரையாடப்படுகின்றன.”- என்றார்.





தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன – எஸ்.சிறீதரன் Reviewed by Vijithan on September 26, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.