மன்னார் நகர சபையினால் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவு அகற்றல் ஸ்தம்பிதம்- -மன்னார் நகர முதல்வர் எச்சரிக்கை.
மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை (14) மதியம் மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக்கி தரப்படவில்லை.குறித்த பிரச்சினைக்கு எவ்வித தீர்வு கிடைக்கவில்லை.சின்னக்கடை வட்டாரத்தில் ஒரு இடத்திலேயே அகழப்படுகின்ற குப்பைகளை கொட்டி வந்தோம்.
அவ்விடத்தில் பாரிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது,அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவ்விடத்தில் குப்பை கொட்டுவது உடனடியாக நிறுத்தப் பட்டுள்ளது.
மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைகளை கொட்ட ஒரு இடம் ஒதுக்கி தருமாறு ,மாவட்ட செயலாளர் , வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
மக்களின் தேவைகளுக்காக இடம் ஒதுக்கி தர முடியாத நிலையில் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இடத்தை ஒதுக்குகிறார்கள்.ஆனால் மன்னார் மக்களின் தேவைக்காக இடம் ஒதுக்க மறுக்கின்றார்கள்.குப்பை அகழ்வு செய்தாலும்,கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை காணப்பட்டுள்ளது.
இதனால் நேற்றைய தினம் திங்கட்கிழமை(13) அகழ்வு செய்யப்பட்ட குப்பைகள் வாகனத்துடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) குப்பை அகழ்வு செய்யப்படவில்லை. நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மன்னாரில் கழிவு அகற்றல் இடம் பெறாது. இது வரை இடம் ஒதுக்கி தரவில்லை.மன்னார் மக்களின் தேவைகளுக்காக 2 ஏக்கர் நிலப் பரப்பை வழங்க முடியாத வன பாதுகாப்பு திணைக்களம் மன்னார் மக்களுக்கு இனியும் தேவைதானா? என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் 30 வருட யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து ஒரு அமைதியான சூழல் இந்த மன்னாரில் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு இவன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் போன்றவை காரணமாக அமையப் போகிறது.
கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எக் காரணம் கொண்டும் அவ்விடத்தில் இருந்து எடுக்க மாட்டோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,.
மன்னார் நகர சபை பிரிவில் கழிவகற்றல் பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகின்றது.ஏற்கனவே பாப்பாமோட்டை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மன்னார் நகர சபையினர் தமது பிரிவில் அகழ்வு செய்யப்பட்ட குப்பைகளை கொட்டி வந்தனர்.
குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக கொழும்பை தளமாக கொண்ட சூழலியல் அமைப்பு மேன்முறை நீதிமன்றத்தில் வளக்கு தொடுத்ததன் காரணமாக குறித்த இடத்தில் தற்போது கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது மன்னார் நகர சபையினர் அண்மைக்காலமாக மன்னார் மையப்பகுதியில் ஒரு இடத்தில் கழிவுகளை கொட்டி வந்தார்கள்.ஆனால் குறித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதோடு,சூழல் மாசடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் நேற்றைய தினம் திங்கட்கிழமை(13) பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனால் குறித்த கழிவுகள் கொட்டும் இடத்தையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் குப்பை கொட்ட இடம் இல்லாத காரணத்தால் மன்னார் நகர சபையினர் கழிவுகளை சேகரித்த வாகனங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தியுள்ளனர்.
தற்போது சேகரிக்கும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சனை எழுந்துள்ளது.கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் கூடுதலான நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழ் இருப்பதன் காரணத்தினால் அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து அடையாளம் கண்டு அவ்விடத்தில் கழிவுகளை கொட்ட தீர்மானிக்கப்பட்ட போதும் கலப் பரிசோதனையின் போது இணக்கமான நிலை ஏற்படவில்லை.
வன பாதுகாப்பு திணைக்களத் தினால் முன் மொழியப்பட்ட இடத்தை நாங்கள் அடையாளம் காண முற்பட்ட போது குறித்த இடம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இடமாகவும்,குறித்த இடம் மக்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட இடமாகவும் காணப்படுகின்ற மையினால் குறித்த இடம் பொறுத்தமற்ற இடமாக காணப்படுகின்றது.
இதனால் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சினை தற்போது காணப்படுகிறது.குறித்த பிரச்சினை குறித்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக சகல தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுவரை தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.தற்போது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு பகுதி அதில் ஏற்கனவே கழிவுகள் கொட்டப்படும் இடமாக காணப்படுகின்றது.குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அடையாளப்படுத்தப்பட்ட இடமாக உள்ளது.
அதை விட பாப்பாமோட்டை க்கு அருகில் உள்ள இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தற்போது உரிய தரப்பினர் ஊடாக அந்த இடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த இடங்களை பார்வையிட்டு இனக்கமான முறையில் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான இடங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தரமான குப்பைகளை கொட்ட முடியும்.
தற்போது மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளமையினால் மாவட்ட செயலக வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment