இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி அதிரடி கைது!
வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) காதி நீதிமன்றம் மற்றும் பொலன்னறுவை (பதில்) காதி நீதிபதி ஒருவர் 5,000 ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (17) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டாளரின் சட்டபூர்வமான மனைவி, பிள்ளைகளுக்கான பராமரிப்புச் செலவு கோரி வழக்குத் தொடர்ந்திருந்ததுடன், அந்தப் பணத்தைச் செலுத்தத் தவறியமைக்காக நீதவான் நீதிமன்றினால் முறைப்பாட்டாளருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த திறந்த பிடியாணையை இரத்துச் செய்து கொள்வதற்காக, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பராமரிப்பு வழக்கு தொடர்பான விபர அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட பிரதியொன்றை வழங்குவதற்காக, 5,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வாழைச்சேனை 05, அக்பர் பள்ளிவாசல் வீதி, இலக்கம் 621 இல் அமைந்துள்ள காதி நீதிமன்ற அலுவலகத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
Reviewed by Vijithan
on
February 18, 2026
Rating:


No comments:
Post a Comment