போதையில் பேருந்து செலுத்திய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் 7 பேர் கைது!
போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர்.
வழி இலக்கம் 120 (கெஸ்பேவ - புறக்கோட்டை), வழி இலக்கம் 255 (கல்கிஸ்ஸ - கொட்டாவை), வழி இலக்கம் 162 (பிலியந்தலை - பண்டாரகம), வழி இலக்கம் 341 (பிலியந்தலை - மஹரகம), வழி இலக்கம் 341/2 (கரதியன ஊடாக - மஹரகம), வழி இலக்கம் 342 (பிலியந்தலை - கொட்டாவை), வழி இலக்கம் 157 (கஹபொல - பிலியந்தலை) மற்றும் வழி இலக்கம் 157/1 (பிலியந்தலை - மாகந்தன) ஆகிய மார்க்கங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதையில் பேருந்து செலுத்திய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் 7 பேர் கைது!
Reviewed by Vijithan
on
February 12, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 12, 2026
Rating:


No comments:
Post a Comment