தினசரி 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!
தினமும் சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் பதிவாவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹம்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
'புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் புதிய மத்திய நிலையத்தை' திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த புதிய மத்திய நிலையம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவு வளாகத்தில் அமைந்துள்ள தொற்றுநோய் சிகிச்சை கட்டடத்தின் முதலாவது மாடியில் நிறுவப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் 6 பிரதான வைத்தியசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான மத்திய நிலையங்கள் இயங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் இத்தகைய நிலையங்களை நிறுவ அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பதிவாகும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய வைத்தியர் ஹம்சக விஜேமுனி, பெரும்பாலான நோயாளர்கள் நோயின் முற்றிய நிலையிலேயே (பிற்கால கட்டங்களில்) அடையாளம் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்நோயினால் ஒரு நாளைக்கு சுமார் 40 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கையில் நாள்தோறும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாவதாகவும், அவர்களில் மூவர் தினசரி உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் சுய மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும், 20-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையும் வைத்தியசாலைக்குச் சென்று மார்பகப் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அத்திட்டம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
தினசரி 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!
Reviewed by Vijithan
on
February 09, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 09, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment