இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பமாகும் விசேட பஸ் சேவை
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை முறையாகக் கவனிக்கப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இது முன்னெடுக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு’ எனும் அரசாங்கத்தின் தூரநோக்கை யதார்த்தமாக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்தில் நடமாடுவதற்கான தடைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும்.
முதற்கட்டமாக, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் இலகுவாக ஏறுவதற்கு வசதியான 'தாழ்ந்த தளம்' கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கடந்த 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவை சனிக்கிழமை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பேருந்து ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளன.
முன்னோடித் திட்டமாக மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரையில் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையில் இந்த சேவைகள் அமையும்.
தெரிவு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பஸ் தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 'Clean Sri Lanka' திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Reviewed by Vijithan
on
March 12, 2026
Rating:


No comments:
Post a Comment