இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமமான சமூக சூழலை உருவாக்க வேண்டும் பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை!
சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் சமூக மட்டத்தில் சேவைகளை வழங்கிவரும் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளை அழைத்து மகளீர் தின கலந்துரையாடல் ஒன்றினை 12.03.2024 அன்று ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
உரிமைகள் – நீதி – செயல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் அங்கவீனமான பெண்கள் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,மற்றும் நில ஆக்கிரமிப்பினால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நுண்நிதி கடனினால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்களால் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்ககொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் முடிவில் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனைகளை கௌரவிப்பதற்கும், பாலின சமத்துவத்தை முன்னெடுப்பதற்கும், பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தலை வலியுறுத்துவதற்கும் இந்த நாள் முக்கியமானதாகும்.
2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் மையக்கருத்தாக உரிமைகள், நீதி. செயல் அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் என்பதைக் கொண்டுள்ளது.
பெண்களின் உரிமைகள் குறித்து பேசுவது மட்டும் போதாது; அவற்றை நடைமுறையில் உறுதி செய்யும் செயல்பாடுகள் அவசியம் என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.அதேபோல் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சிக்கு நாம் வழங்கும் ஆதரவு சமூகத்தின் முழுமையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவூட்டுகிறது.
இன்றைய உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய மோதல்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலைகளில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் பெண் குழந்தைகளும் தான். போர்கள் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை உணவு உற்பத்தி, வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கின்றன.
குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பெரும்பாலும் பெண்கள்மீதே விழுகிறது.
இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள் விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
கிராமப்புற பெண்கள் விதைகள் பாதுகாப்பு, வீட்டு தோட்டங்கள், பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை பராமரிப்பதில் முன்னணி சக்தியாக உள்ளனர். இருப்பினும் நில உரிமை, கடன் வசதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் சந்தை அணுகல் போன்ற பல முக்கிய துறைகளில் பெண்களுக்கு இன்னும் சமமான வாய்ப்புகள் கிடைக்காத நிலை உள்ளது.
சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளும் பெண்களின் நலனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பல குடும்பங்களில் பெண்கள் தங்கள் தேவைகளைத் தாழ்த்திக் கொண்டு குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தும் பழக்கம் இன்னும் காணப்படுகிறது. இதனால் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் சமூக நீதியைப் பற்றி பேசும் போது பெண்களின் உரிமைகள் மையத்தில் இருக்க வேண்டும்.
சமூக மற்றும் சூழல் அபிவிருத்தியை வலுப்படுத்தும் நிறுவனமாக, பெண்களின் உரிமைகள், தலைமைத்துவம் மற்றும் சமூக பங்கேற்பு ஆகியவை நிலையான வளர்ச்சியின் அடிப்படை அம்சங்களாக இருப்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
பெண்கள் நிலம், இயற்கை வளங்கள், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் சமமான அணுகலைப் பெறும்போது தான் சமூக முன்னேற்றம் நிலையானதாக இருக்கும்.
எனவே, பெண்களின் அதிகாரமளித்தலை வலுப்படுத்துவதற்காக பின்வரும் விடயங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது
பெண்களின் நில மற்றும் இயற்கை வள உரிமைகளை பாதுகாத்தல்
கிராமப்புற பெண்கள் விவசாயிகளின் தலைமையையும் முடிவெடுப்பில் அவர்களின் பங்கையும் உறுதி செய்தல்
நிலையான மற்றும் இரசாயனமற்ற விவசாய முறைகளை ஊக்குவித்தல்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான கல்வி, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துதல்
பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமமான சமூக சூழலை உருவாக்குதல்
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாத ஒரு சமூகத்தில் உணவு பாதுகாப்பும், சமூக நீதியும், நிலையான வளர்ச்சியும் உறுதி செய்ய முடியாது. பெண்களின் பங்களிப்பும் அறிவும் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தியாகும்.
இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பெண்கள் முன்னேறும்போது சமூகமும் முன்னேறும்; சமூகமும் முன்னேறும்போது நாடும் வளரும்.
உரிமைகள் – நீதி – செயல் என்பது ஒரு கோஷம் மட்டுமல்ல. அது சமத்துவமான மற்றும் நீதிமிக்க உலகத்தை உருவாக்குவதற்கான நம் அனைவரின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
March 13, 2026
Rating:









No comments:
Post a Comment