'QR'குறியீட்டுக்காக 27 இலட்சம் பேர் புதிதாக பதிவு
எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'QR' குறியீட்டு முறையின் கீழ், மார்ச் 14ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 62 இலட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகிக்கும் முறை மார்ச் 14 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு இதனைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருந்தன.
அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதை அடுத்து, இன்று நண்பகல் வரை 62 இலட்சத்திற்கும் அதிகமானோர் 'QR' வசதியைப் பெற்றுள்ளனர்.
இந்த மொத்த எண்ணிக்கையில் 27 இலட்சத்திற்கும் அதிகமானோர் மார்ச் 15 முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், 'QR' பதிவில் சிக்கல்களை எதிர்கொண்டவர்களுக்காக மார்ச் 19 அன்று வழங்கப்பட்ட ஓவரைட் (Overwrite) வசதியின் மூலம் 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக QR வசதியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இருப்பினும், இன்னும் சுமார் 2 இலட்சம் அளவிலானோருக்கு 'QR' வசதியைப் பெற்றுக்கொள்வதில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் நிலவுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
'QR'குறியீட்டுக்காக 27 இலட்சம் பேர் புதிதாக பதிவு
Reviewed by Vijithan
on
March 26, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 26, 2026
Rating:


No comments:
Post a Comment