மன்னார் நகர சபைக்கு சொந்தமான வியாபார கட்டிடம் இன்று கழுதைகளின் இருப்பிடம்...
>நகர சபைக்கு சொந்தமான மன்னார் கல்வி பணிமனைக்கு முன்னால் அமைந்துள்ள கடைத்தொகுதி தற்போது பயன்பாடின்றி காணப்படுவதால் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த நகர சபை நிர்வாக காலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் தெருவோர வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த கட்டிடத் தொகுதியில் தற்போது எந்தவித வியாபார நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் குறித்த கட்டிடம் கழுதைகளின் தங்குமிடமாகவும் மது அருந்துவோரின் கூடாரமாகவும் பயன்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது நகர சபைக்கு சொந்தமான பொதுச் சொத்து என்பதால் அதன் பராமரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
தகவல்களின் படி, குறித்த கட்டிடத் தொகுதியில் 14 கடைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கடைக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 300 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளொன்றுக்கு ரூபாய் 4200 வருமானத்தை மன்னார் நகர சபை இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மழை மற்றும் கடும் வெயிலிலும் நிரந்தர வசதியின்றி தெருவோர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் சிறு வியாபாரிகளுக்கு இந்த கடைத்தொகுதியை வழங்குவதன் மூலம், வியாபாரிகளுக்கும் நிவாரணம் கிடைப்பதோடு நகர சபைக்கும் வருமானம் ஈட்ட முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, பயன்பாடின்றி காணப்படும் இந்த கட்டிடத் தொகுதியை உரிய முறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
May 15, 2026
Rating:


No comments:
Post a Comment