எல் நினோ காரணமாக தீவிர ஆபத்து விளைவுகள் ஏற்படக்கூடும் என கணிப்பு
உலகெங்கிலும் தீவிர வானிலை நிலையை உருவாக்கும் எல் நினோ (El Niño) நிகழ்வு இம்முறை தீவிர ஆபத்து விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதற்கு முகங்கொடுக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே சுட்டிக்காட்டுகிறார்.
இந்த எல் நினோ நிகழ்வு பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது இது பலவீனமான மட்டத்தில் காணப்பட்டாலும், எதிர்காலத்தில் பலமாக வளர்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது கடுமையான வறட்சியான வானிலை நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், சில பிரதேசங்களில் பல நீர்நிலைகள் வற்றிப்போயுள்ளதால் பயிர்ச்செய்கை நிலங்கள் அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில், இம்முறை பெரும் போக நெற்செய்கையை ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நிலவும் வறட்சியான வானிலை நிலை நீங்கும் வரை நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.
எல்-நினோ காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மையம் ஏற்கனவே திட்டங்களை தயாரித்து வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவிக்கிறார்.
ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைக்கான தயார்நிலை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னிலையில் அண்மையில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாராளுமன்றத்தினால் சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிதியம் இன்னமும் முறைப்படி செயற்படவில்லை என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் மேலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Reviewed by Vijithan
on
July 30, 2026
Rating:


No comments:
Post a Comment