யாழ் கீரிமலை குப்பை மேட்டில் இரு நாட்களாக பற்றி எரியும் தீ!
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தீ எரிந்துகொண்டிருப்பதனால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வலி. வடக்கு பிரதேசத்தில் , மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் , 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணக்கற்கள் அகழ்ந்த பகுதிகளில் பாரிய குழிகள் காணப்படுகின்றன.
அத்துமீறி நுழைந்த கும்பல் தீ வைப்பு
அவற்றுக்குள் குப்பைகளை கொட்டி , ” சுகாதார நில நிரவுகை திட்டம்” என குழிகளை மூடும் நடவடிக்கை 2019ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் , அது கைவிடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அந்த குழிகளுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினர் மற்றும் கடற்படையினர் டிப்பர் வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.
இது தொடர்பில் கடந்த 16ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அது தொடர்பில் பிரஸ்தாபித்து , குழிகளுக்குள் குப்பைகளை கொட்ட அனுமதிப்பதில்லை எனவும் , கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் தமது சபை தீர்மானத்தையும் மீறி , வலி. தெற்கில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதாக வலி.வடக்கு பிரதேச சபையின் சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்து நேற்று முன்தினம் அப்பகுதி சென்ற போது அங்கு கடற்படையினர் டிப்பர் வாகனத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு வந்த வேளை திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் , குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த பகுதிக்கு நேற்றைய தினம் காலை அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது. குறித்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருவதனால் , அப்பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்கோவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
July 29, 2026
Rating:


No comments:
Post a Comment